செயற்கை நுண்ணறிவை (ஏஐ) எப்படி, எப்போது பின்பற்றுவது போன்ற முடிவுகளை சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எடுக்க புதிய பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஏஐ.டியா (AI.dea) என்றழைக்கப்படும் அந்த எட்டு வாரப் பயிற்சித் திட்டம் மூன்று கட்டங்களாக நடத்தப்படும். இத்திட்டத்தில் எட்டு நாள் நேரடி அமர்வுகளும் அடங்கும்.
சிங்டெல் நிறுவனம், வேலைப் பயிற்சிப் பாடங்களை வழங்கும் ‘எஸ்ஐஎம் அகாடமி’ எனும் பயிலகத்துடன் சேர்ந்து புதிய பயிற்சித் திட்டத்தை புதன்கிழமை (ஏப்ரல் 29) அறிமுகப்படுத்தியது. சிறிய, நடுத்தர நிறுவன வாடிக்கையாளர்கள் செயற்கை நுண்ணறிவைப் பின்பற்றுவது குறித்து கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து இத்திட்டம் உருவாக்கப்பட்டதாக சிங்டெல் கூறியது.
பயிற்றுவிப்பாளர்கள்
எஸ்ஐஎம் பயிலகத்தைச் சேர்ந்த ஆலோசகர்கள், சிங்டெல் இணையப் பாதுகாப்புக் கழக வல்லுநர்கள், ட்ரூ அண்ட் நேப்பியர் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் திட்டத்தில் பயிற்றுவிப்பாளர்களாகச் செயல்படுவர்.
ஏஐ.டியாவின் முதற்கட்டம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. பயிற்சியில் பங்கேற்க ஒவ்வொருவருக்கும் கட்டணம் 15,000 வெள்ளி.
தகுதி நிபந்தனைகள்
புதிய பயிற்சிக்குத் தகுதிபெறும் நிறுவனங்களுக்குக் கட்டணத்தில் 90 விழுக்காடுவரை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிதி ஆதரவு வழங்கப்படும். நிதி ஆதரவைக் கணக்கில் எடுக்கும்போது, ஒவ்வொரு பங்கேற்பாளருக்குமான கட்டணம் கிட்டத்தட்ட 1,500 வெள்ளியாக இருக்கும்.
இப்பயிற்சித் திட்டத்துக்குத் தகுதிபெற ஒரு நிறுவனம் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்டுச் செயல்படவேண்டும். அதில் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகையில் குறைந்தது 30 விழுக்காடு சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளின் முதலீடாக இருக்கவேண்டும். ஆண்டுதோறும் அதன் ஒட்டுமொத்த விற்பனை வருமானம் 100 மில்லியன் வெள்ளியைத் தாண்டக்கூடாது அல்லது அதனிடம் 200க்கும் குறைவான ஊழியர்கள் இருக்கவேண்டும்.

