உட்லண்ட்ஸ், செம்பவாங்கில் புதிய சைக்கிள் பாதை

உட்லண்ட்ஸ், செம்பவாங்கில் புதிய சைக்கிள் பாதை

படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

14 Nov 2026 - 3:54 pm

2 mins read

உட்லண்ட்ஸ், செம்பவாங் ஆகிய வட்டாரங்களில் உள்ள சைக்கிளோட்டிகளின் உற்சாகத்தை மெருகேற்றுகிறது புதிதாக அமைக்கப்பட்டுள்ள சைக்கிள் பாதை.

கிட்டத்தட்ட 16 கிலோமீட்டர் தூரம்வரை அமைக்கப்பட்டுள்ள அந்தப் பாதை வழி அட்மிரல்டி, மார்சிலிங், உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சவுத் ஆகிய ரயில் நிலையங்களுக்குச் செல்லலாம்.

புதிய சைக்கிளோட்டப் பாதையுடன் சேர்த்து உட்லண்ட்ஸ், செம்பவாங் வட்டாரத்தில் 42 கிலோமீட்டர் தூரத்திற்குச் சைக்கிளோட்டப் பாதையும் பூங்கா இணைப்புப் பாதைகளும் உள்ளன.

மார்சிலிங் ரயில் நிலையத்தில் சைக்கிள்களை நிறுத்த கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மார்சிலிங் ரயில் நிலையத்தில் சைக்கிள்களை நிறுத்த கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

சுகாதார அமைச்சரும் செம்பாவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஓங் யி காங், சனிக்கிழமை (நவம்பர் 14) புதிய சைக்கிள் பாதையை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.

உட்லண்ட்சில் உள்ள சைக்கிள் பாதை இணைப்புகள் உட்லண்ட்ஸ், செம்பவாங் பேட்டைகளை இணைப்பதுடன் செம்பவாங் வெஸ்ட், செம்பவாங், மார்சிலிங்- யு டீ ஆகிய வட்டாரங்களில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு நன்மை பயக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.

செம்பவாங், கென்பரா ரயில் நிலையங்களுடன் இணைக்கும் தற்போதைய சைக்கிள் பாதைகளுடன் புதிய சைக்கிள் பாதை இணைகிறது.

விரிவுபடுத்தப்பட்ட சைக்கிள் பாதைகளால் உட்லண்ட்ஸ் சிவிக் நிலையம், காஸ்வே பாய்ன்ட் கடைத்தொகுதி, கம்போங் அட்மிரல்டி, உட்லண்ட்ஸ் சுகாதார வளாகம், ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, உட்லண்ட்ஸ் வாட்டர்ஃபிரன்ட் பூங்கா ஆகிய முக்கிய இடங்களுக்கும் செல்லலாம் என்று ஆணையம் சுட்டியது.

புதிய சைக்கிள் பாதைகளுக்கு வழிவிட பாதசாரிகள் சாலைகளைக் கடக்கும் 35 பகுதிகள் விரிவாக்கப்பட்டு, சாலைகளைக் கடக்க எட்டு சைக்கிள் தடங்கள் அமைக்கப்பட்டன.

பேருந்து நிறுத்தங்களில் காத்திருப்போரை எளிதில் கடந்துசெல்ல 44 பேருந்து நிறுத்தங்கள் மேம்படுத்தப்பட்டன.

உட்லண்ட்ஸ் அவென்யூ 5ல் உள்ள பேருந்து நிறுத்தம் சைக்கிளோட்டிகள் கடந்து செல்ல வசதியாக விரிவுபடுத்தப்பட்டது.
உட்லண்ட்ஸ் அவென்யூ 5ல் உள்ள பேருந்து நிறுத்தம் சைக்கிளோட்டிகள் கடந்து செல்ல வசதியாக விரிவுபடுத்தப்பட்டது. - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

ரயில் நிலையங்களுக்கும் வீடுகளுக்கும் சைக்கிள்களில் பயணம் செய்வோருக்கு வசதியாக அட்மிரல்டி, மார்சிலிங் ரயில் நிலையங்களில் ஏறக்குறைய 500 சைக்கிள் நிறுத்த இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிய சைக்கிள் பாதை திறக்கப்பட்டதை அடுத்து மக்கள் கழகமும் அடித்தளக் குழுக்களும் ஏற்பாடு செய்த சமூக சைக்கிளோட்ட, துரித நடை நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 400 பேர் கலந்துகொண்டனர்.

உட்லண்ட்சிலிருந்து செம்பவாங் வரையிலான 7.2 கிலோமீட்டர் பாதையில் 40க்கும் அதிகமானோர் சைக்கிள்களில் சென்றனர்.

விரிவுபடுத்தப்பட்ட சைக்கிள் பாதைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ குடியிருப்பாளர்களை ஊக்குவிப்பதில் பங்காற்ற முடிவதாகவும் நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.

2027ஆம் ஆண்டுமுதல் உட்லண்ட்ஸ், செம்பவாங் ஆகியவற்றில் ஏறக்குறைய 9 கிலோமீட்டர் தூரம் கொண்ட கூடுதலான சைக்கிள் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அது சுட்டியது.

அந்தப் பாதை எதிர்வரும் ஜோகூர் பாரு - சிங்கப்பூர் அதிவேக ரயில் நிலையத்துடன் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
சைக்கிள்சைக்கிளோட்டிவிரிவாக்கம்நிலப் போக்குவரத்து ஆணையம்