ஓய்வு வயது 65, மறுவேலைவாய்ப்பு வயது 70: ஓராண்டுக்கு முன்னரே நடப்புக்கு வருகிறது

மூத்த ஊழியர்களின் வேலை நியமனத்திற்கான பணிக்குழு அறிக்கை வெளியீடு

ஓய்வு வயது 65, மறுவேலைவாய்ப்பு வயது 70: ஓராண்டுக்கு முன்னரே நடப்புக்கு வருகிறது

படம்: பே.கார்த்திகேயன்

26 Oct 2026 - 1:47 pm

3 mins read

நீண்டகாலம் வாழும் மூத்த சிங்கப்பூரர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப, தொடர்ந்து உழைத்து சுயமரியாதையுடனும் பொருளியல் வலிமையுடனும்  திகழ்வதற்கு ஏதுவாகப் பணி ஓய்வு வயது, மறுவேலைவாய்ப்பு உச்ச வரம்பு, திட்டமிடப்பட்ட காலத்திற்கு ஓராண்டு முன்னரே உயர்த்தப்படவுள்ளது. 

மூத்த ஊழியர்களின் வேலை நியமனத்திற்கான பணிக்குழுவின் பரிந்துரைகளின்படி, 2029ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பணி ஓய்வு வயது 64லிருந்து 65 ஆகவும் மறுவேலைவாய்ப்பு வயது வரம்பு 69லிருந்து 70 ஆகவும் முன்கூட்டியே நடைமுறைக்கு வரவுள்ளது.

மனிதவள அமைச்சு, தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் , சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்ட மூத்த ஊழியர்களின் வேலை நியமனத்திற்கான பணிக்குழு தயாரித்த விரிவான அறிக்கை திங்கட்கிழமை (அக்டோபர் 26) வெளியிடப்பட்டது.

புதிய விடியலை நோக்கிய இந்த அறிக்கையை வெளியிட்டு மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் பேசினார்.

“நீண்ட காலம் வேலை செய்வது என்பது ஒரே வேலையைத் தொடர்ந்து பல ஆண்டுகள் இயந்திரத்தனமாகச் செய்வதை மட்டும் குறிக்காது; ஊழியர்கள் தங்களின் வாழ்க்கையின் பல்வேறு காலங்களுக்கு ஏற்ப, பணிச் சுமையை அமைத்துக்கொண்டு, விருப்பத்தோடும் மனநிறைவோடும் தொடர்ந்து பங்களிக்க வாய்ப்பளிப்பதே இதன் முக்கிய நோக்கம்,” என்று அவர் தெரிவித்தார். 

கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சருமான அவர், தொழில்நுட்பமும் பணிச்சூழலும் மின்னல் வேகத்தில் உருமாறிவரும் நிலையில், நிறுவனங்கள் பல தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் கைகோத்து உழைக்கும் நவீனப் பணிச்சூழலை உருவாக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.   

பணிக்குழு பரிந்துரைத்த மாற்றங்களின் ஓர் அங்கமாக, பணி ஓய்வு வயதுக்கு அப்பாலும் வேலைசெய்ய முன்வரும் மூத்த ஊழியர்களை உற்சாகப்படுத்தும் வகையில், அவர்களுக்குரிய ‘ஈட்டப்பட்ட வருமானத்திற்கான நிவாரணம்’ அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மூத்த ஊழியர்களின் கைகளில் மிஞ்சும் நிகர வருமானம் கணிசமாக உயரும். அதேநேரம், பணி ஓய்வுக்குப் பின் எதிர்பாராத சூழலால் மறுவேலைவாய்ப்பைப் பெற இயலாத நிலைக்குத் தள்ளப்படும் மூத்தோரின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் ‘வேலைநியமன உதவித்தொகையின்’ குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச நிதி வரம்புகள் அண்மை ஊதிய உயர்வுக்கு ஏற்ப உயர்த்தப்படவுள்ளன. 

பரிந்துரைகளில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு தகவல் மறுவேலை நியமனம் சார்ந்தது. அவ்வகையில் முதலாளிகள் மூத்தோரைத் தொடர்ந்து பணியமர்த்துவதை ஊக்குவிக்க, தற்போதுள்ள திட்டத்திற்கு மாற்றாக 2028 முதல் புதிய ‘மறுவேலை நியமன உதவித்தொகை’த் திட்டமும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பப் பராமரிப்பு, உடல்நலக் காரணங்களுக்காக முழுநேரப் பணியிலிருந்து முன்கூட்டியே விலகும் மூத்த ஊழியர்கள், மீண்டும் பணிக்குத் திரும்ப ஏதுவாக நீக்குப்போக்கான வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட இதரத் திட்டங்களை நிறுவனங்கள் உருவாக்கவும் வழிகாட்டப்பட்டுள்ளது. 

இதற்காகத் ‘திறன் ஊழியரணி மேம்பாட்டு அமைப்பின்’ கீழ், புதிய திட்ட அலுவலகம் நிறுவப்படவுள்ளதோடு, குறைந்த ஊதியம் பெறும் மூத்த ஊழியர்களின் மத்திய சேமநிதிச் (சிபிஎஃப்) சேமிப்பை உயர்த்த ‘வேலைநலன் துணை வருமானத் திட்டம்’ மேம்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

மனிதவள நெருக்கடியை எதிர்நோக்கும் சிங்கப்பூர் வர்த்தக நிறுவனங்களுக்கு வலுச்சேர்க்கும் அதே வேளையில், தங்களின் வாழ்நாள் அனுபவத்தை நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்குத் தடையின்றி வழங்க விரும்பும் மூத்த குடிமக்களின் கரங்களை இந்த அறிவிப்புகள் மேலும் உறுதிப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்