தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணைய அச்சுறுத்தல்களைக் கையாள புதிய தற்காப்புப் பிரிவு

2 mins read
953b320a-54f6-4935-8618-a8f1be68f724
இவ்வாண்டின் ‘டெக்கான்’ மாநாட்டில் பேசிய அமைச்சர் கா. சண்முகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எளிதில் அடையாளம் காண முடியாத கூடுதல் துல்லியமான இணையத் தாக்குதல்களைக் கையாள தற்காப்பு அமைச்சு, புதிய பிரிவொன்றை அமைத்துள்ளது.

அபாயகரமான இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாள அரசாங்கத்தின் ஆற்றல்களை மேம்படுத்த வகைசெய்வது மின்னிலக்கத் தற்காப்பு நடுவம் (Digital Defence Hub) என்றழைக்கப்படும் இப்பிரிவின் இலக்காகும். அதோடு, இணையத் தாக்குதல்களைக் கையாளும் தரப்பினருக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் நோக்கம்.

தற்காப்பு அமைச்சின் உத்திபூர்வ தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிலையத்துக்குக்கீழ் (சிஎஸ்ஐடி) புதிய மின்னிலக்கத் தற்காப்புத் தளம் வருகிறது. அரசாங்க, தனியார் என இருவகை துறைகளிலும் இணையப் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்புக்கு மெருகூட்டுவதும் புதிய பிரிவின் பொறுப்பாகும்.

தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) மின்னிலக்கத் தற்காப்புத் தளத்தைப் பற்றி அறிவித்தார். ஆண்டுதோறும் சிஎஸ்ஐடி நடத்திவரும் டெக்கான் (TechCon) எனும் தொழில்நுட்ப மாநாட்டில் அவர் பேசினார்.

தேசியப் பாதுகாப்புக்கு முக்கியமானவையாக விளங்கும் அரசாங்க அமைப்புகள், நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஆற்றல்களை மேம்படுத்தி செயல்படுத்துவதில் மின்னிலக்கத் தற்காப்புத் தளம் கவனம் செலுத்தும் என்று மாநாட்டில் உள்துறை அமைச்சருமான திரு சண்முகம் குறிப்பிட்டார். ஏபிடி என்றழைக்கப்படும் அதிநவீன அச்சுறுத்தல்கைளைக் கையாளும் ஆற்றல் போன்றவற்றை மேம்படுத்துவது நோக்கமாகும்.

ஏபிடி இணையத் தாக்குதல்காரர்கள், தனிப்பட்ட தகவல்களைத் திருடவோ அத்தியாவசியச் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கவோ இணையக் கட்டமைப்புகளில் செயல்படுபவர்களாகும். பொதுவாக அத்தகையோர் பிற நாட்டு அரசாங்கங்களின் ஆதரவுடன் செயல்படுபவர்களாக இருப்பர்.

யுஎன்சி3886 எனும் ஏபிடி குழு, சிங்கப்பூரின் முக்கியத் தகவல் கட்டமைப்பின் மீது நடத்தி வரப்பட்ட தாக்குதல்களை அதிகாரிகள் கையாள்வதாக கடந்த ஜூலை மாதம் திரு சண்முகம் தெரிவித்திருந்தார். யுஎன்சி3886 யாருடைய ஆதரவுடன் செயல்பட்டது என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. ஆனால், அக்குழு சீனாவுடன் தொடர்புடையது என்று வல்லுநர்கள் சம்பந்தப்படுத்தியுளள்னர்.

“சவால்கள் அதிகரிக்கின்றன. அதிகத் தொடர்புகள் உள்ள மின்னிலக்க சமூகமான நாம், மின்னிலக்கப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்குவது மிகவும் மக்கியம் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது,” என்றார் திரு சண்முகம்.

இணைய அச்சுறுத்தல்களைக் கையாள்வதில் பல்வேறு தரப்புகளுக்கிடையே ஒத்துழைப்பு இருப்பதன் முக்கியத்துவத்தையும் திரு சண்முகம் சுட்டினார். அரசாங்க அமைப்புகளுக்கும் தொழில்துறைப் பங்காளி அமைப்புகளுக்கும் இடையே அடிக்கடி பரிமாற்றங்கள் இருந்து வருவதால் நிலைமையை மேலும் நன்கு கையாள முடிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்