தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீண்டகால சர்க்கரை அளவைத் துரிதமாக அளவிடும் புதிய கருவி

2 mins read
5869cb2c-33cb-49ca-842b-2c45b8214417
எஸ்ஜி டைக்னொஸ்டிக் உள்ளூர் நிறுவனம் தயாரித்த புதிய கருவி ஒருசில நிமிடங்களில் சோதனை முடிவுகளைத் தரும் ஆற்றல்கொண்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள மூன்று மாத சர்க்கரை அளவை ஆறு நிமிடங்களில் அளவிட உதவும் புதிய கருவி சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அத்தகைய சர்க்கரை அளவை அளவிட ஒருசில நாள்கள் தேவைப்படும்.

அத்தகைய பரிசோதனை, நோயாளிகளின் கண்கள், சிறுநீரகம், இதயம் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய மருத்துவப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய உதவும்.

என்ஹெச்ஜி (NHG) பலதுறை மருந்தகங்களும் மருத்துவக் கருவிகளைத் தயாரிக்கும் எஸ்ஜி டைக்னொஸ்டிக் உள்ளூர் நிறுவனமும் ரேபிட் ஹெச்பிஏ1சி பாயிண்ட்-அஃப்-கேர்-டெஸ்ட் எனும் கருவியை உருவாக்கியுள்ளனர்.

சிவப்பு ரத்த அணுக்களில் உள்ள ஹிமோகுளோபின் எனும் ஒருவித புரதத்தில் இருக்கும் சர்க்கரை அளவை புதிய கருவி அளவிடுகிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கணக்கிட பயன்படுத்தப்படும் வழக்கமான நடைமுறையைப் புதிய கருவி கொண்டுள்ளது. அது உடனடியாக நோயாளிகளுக்கு முடிவுகளைக் காண்பித்துவிடும் என்று காலாங் பலதுறை மருந்தகத் தலைவர் வெலரி டியோ குறிப்பிட்டார்.

“நோயாளிகள் வீடு திரும்புவதற்கு முன்னரே அப்போதே முடிவுகளைத் தெரிந்துகொள்வர்,” என்ற டாக்டர் டியோ, 2022ஆம் ஆண்டிலிருந்து முயன்று புதிய சோதனைக் கருவியைக் கண்டுபிடித்தார்.

அந்தக் கருவி தரும் முடிவுகள் ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்படும் சோதனைகளைப் போன்ற சமமான முடிவுகளைத் தரும் என்றார் அவர்.

2025ஆம் ஆண்டுக்கான பொதுத் துறை உருமாற்று விருது நிகழ்ச்சியில் அந்தப் புதிய கருவி முன்மாதிரி புத்தாக்க விருதை வென்றது.

புதிய கருவியைத் தீவெங்கும் உள்ள கிட்டத்தட்ட 300 பொது மருந்தகங்கள் பயன்படுத்துவதாக டாக்டர் டியோ குறிப்பிட்டார்.

‌‌‌ஷாப்பி, லசாடா ஆகிய இணையத்தளங்களில் $466க்கு கருவியை வாங்கி சுய பரிசோதனைகளையும் நோயாளிகள் செய்துகொள்ள முடியும்.

முன்னோட்டச் சோதனையாக 30 நோயாளிகள் புதிய கருவியை வீட்டுக்கு எடுத்துச் சென்று ஆறு மாதங்கள் அதைப் பயன்படுத்தினர். அந்த முன்னோடித் திட்டத்தின் முடிவுகள் ஒன்றுதிரட்டப்படுகின்றன.

கடந்த 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய மக்கள்தொகை சுகாதாரப் புள்ளிவிவரப்படி சிங்கப்பூரில் 12 பேரில் ஒருவருக்கு நீரிழிவு உள்ளது.

குறிப்புச் சொற்கள்