தேசிய சிறுநீரக அறநிறுவனம், ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையை வீட்டிலிருந்தவாறு மேற்கொள்ளும் அனுபவத்தைத் தரும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
செங்காங் ரத்த சுத்திகரிப்பு நிலையத்தில் செயல்படும் அந்த வசதி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
செங்காங் சமூக மருத்துவமனையில் 15 ஹீமோடயாலிசிஸ் வசதிகள் கொண்ட அந்த நிலையம், சன் வாங் வு டி சமயச் சங்கம் வழங்கிய $2 மில்லியன் நன்கொடையால் உருவாக்கப்பட்டது.
வீட்டில் இருக்கும் அனுபவத்தைத் தரும் வசதியில் ஒரு வரவேற்பு அறையும் ‘பெரிட்டோனியல் டயாலிசிஸ்’ ரத்த சுத்திகரிப்புச் சாதனமும் உண்டு.
தேசிய சிறுநீரக அறநிறுனத்தின் ‘பெரிட்டோனியல் டயாலிசிஸ்’ தாதிகளின் உதவியுடன் வீட்டைப் பிரதிபலிக்கும் வசதியில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டோர் தொடக்கக் கட்ட சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
“வீட்டைப் பிரதிபலிக்கும் சூழலில் ரத்தச் சுத்திகரிப்பைச் செய்துகொள்வதற்கான பயிற்சியை நோயாளிகள் பெறுகின்றனர். அதன் மூலம் மருத்துவமனையை அடிப்படையாகக் கொண்ட பயிற்சியிலிருந்து வீட்டுக்குச் செல்லும்போது ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சையை நோயாளிகள் சுயமாக மேற்கொள்வது சுலபமாக இருக்கும்,” என்றார் அறநிறுவனத் தலைவர் அங் ஹாவ் யாவ்.
அறநிறுவனத்தின் நிலையங்களில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையை நோயாளிகளுக்கு வழங்கிவரும் வேளையில், வீட்டிலிருந்தபடி சிகிச்சையை மேற்கொள்ளும்படி அதிகமானோரை அது ஊக்குவிக்கிறது.
கிட்டத்தட்ட 300 நோயாளிகளை வீட்டிலிருந்து ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையைக் மேற்கொள்ள வைக்கவேண்டும். அதற்கான மூவாண்டுத் திட்டத்தின்கீழ், தன்னுடன் இணைந்து செயல்படும் ஆறாவது மருத்துவமனை செங்காங் சமூக மருத்துவமனை என்று அறநிறுவனம் குறிப்பிட்டது.
இவ்வாண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட திட்டத்தின்கீழ், சிறுநீரகக் குழுக்களுடன் இணைந்து செயல்பட அறநிறுவனம், அதன் ‘பெரிட்டோனியல் டயாலிசிஸ்’ தாதிகளை மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்துள்ளது.
வீட்டிலிருந்தவாறு சுத்திகரிப்புச் செய்வது குறித்து நோயாளிகளும் அவர்கள் குடும்பங்களும் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள அந்தத் தாதிகள் உதவுவர்.
