$520 மி. செலவில் ஷெங் சியோங் கட்டும் புதிய விநியோகிப்பு நிலையம்

$520 மி. செலவில் ஷெங் சியோங் கட்டும் புதிய விநியோகிப்பு நிலையம்

2 mins read
6b1f8df8-ce3e-4cbb-8722-be256f1db845
ஷெங் சியோங்கின் புதிய விநியோகிப்பு நிலையம் சுங்கை காடுட்டில் கட்டப்படுகிறது. இதற்கான நில அகழ்வு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்த துணைப் பிரதமர் கான் கிம் யோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் முழுவதும் பேரங்காடிகளை நடத்தும் ஷெங் சியோங் நிறுவனம், 520 மில்லியன் வெள்ளி செலவில் புதிய தலைமையக, விநியோக மையத்தைக் கட்டுகிறது.

சுங்கை காடுட்டில் கட்டப்படும் அந்தக் கட்டடம், முழுமையாகத் தானியக்கமயமாக்கப்பட்டிருக்கும்.

ஷெங் சியோங், இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்தக் கட்டடத்திற்காக 520 மில்லியன் வெள்ளியை முதலீடு செய்கிறது.

புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா திங்கட்கிழமை ( ஜூலை 13) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், புவிசார் அரசியல் பதற்றங்கள், பருவநிலை மாற்றம், எரிசக்தி விலை உயர்வு, விநியோகச் சங்கிலி இடையூறுகள் போன்றவற்றால் உலகளவில் உணவுப் பொருள்களின் விலைகள் ஏற்ற இறக்கமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

“சிங்கப்பூருக்குத் தேவையான உணவில் 90 விழுக்காட்டை இறக்குமதி செய்வதால் இத்தகைய சவால்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

“வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்குவதற்காக ஷெங் சியோங் தனது செயல்திறனை மேம்படுத்தி விநியோகிப்பாளர்களுடன் நெருக்கமாகச் செயல்படுவதற் கான முயற்சிகளை எடுக்கிறது. அதற்கு இன்றைய அடிக்கல் நாட்டுவிழா ஒரு சான்றாகும். இத்தகைய தொலைநோக்குப் பார்வையால் போட்டித் திறனுடனும் சிங்கப்பூர் தாக்குப்பிடித்து நிலைத்திருக்கவும் உதவுகிறது,” என்று அவர் கூறினார்.

ஜேடிசி, எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் ஆகியவற்றின் உதவியுடன் கட்டப்படும் விநியோகிப்பு மையத்தில் பல நவீன வசதிகள் இருக்கும். தானியக்கச் சேமிப்பு கிடங்கு, விரைவான பொருள் விநியோகம், இயந்திர மனிதத் தொழில்நுட்பம், அறிவார்ந்த கிடங்கு நிர்வாக முறை, வெவ்வேறு வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் சாதனங்கள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“முழுமையாகத் தானியக்கமயமாக்கப்படுவதால் ஊழியர்கள் அடிக்கடி ஈடுபடும் வேலையிலிருந்து விடுபட்டு தானியக்கச் சாதனங்களை இயக்குவதற்கும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் மறுபயிற்சி பெற்று தயாராவார்கள்,” என்று அமைச்சர் கான் சொன்னார்.

மண்டாய் லிங்க்கில் தற்போது உள்ள ஷெங் சியோங்கின் விநியோக நிலையத்தைவிட புதிய மையம் சுமார் இரண்டரை மடங்கு பெரியதாகும்.

ஏறக்குறைய 61,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில், ஏழு தளங்களைக் கொண்ட இந்த அதிநவீனக் கட்டடம் 2029ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது, 120க்கும் மேற்பட்ட பேரங்காடிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்டது. ஆனால் ஷெங் சியோங் தற்போது 90 பேரங்காடிகளை நடத்தி வருகிறது.

மத்திய கிழக்கு மோதல்களால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுகளைச் சமாளிக்க ‘சாஸ்’ அட்டைதாரர்களுக்கான தள்ளுபடிகளும் சிடிசி பற்றுச்சீட்டுகளுக்கு சிறப்புச் சலுகைகளும் வழங்கி சிங்கப்பூரர்களுக்கு உதவியதற்காக ஷெங் சியோங் நிறுவனத்திற்கு அமைச்சர் கான் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இதே நிகழ்ச்சியில் பேசிய ஷெங் சியோங்கின் தலைமை நிர்வாக அதிகாரியான லிம் ஹோக் சீ, “நாங்கள் வளர்ந்துவரும்போது, எங்களுடைய வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்கவும், எங்கள் விநியோகிப்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும், எங்கள் ஊழியர்களுக்குச் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வலுவான அடித்தளத்தை நாங்கள் அமைக்க வேண்டியிருக்ககிறது,” என்று குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்