பேருந்துகள் வரும் நேரத்தைப் பயணிகளுக்குத் தெரிவிக்க புதிய மின்னணு காகிதத் திரையை நிலப் போக்குவரத்து ஆணையம் சோதித்து வருகிறது.
காகிதத்தின் மீது மை கொண்டு எழுதியது போலவே காட்சியளிக்கும் அந்த வண்ணத்திரை சூரிய மின்சக்தியால் இயங்கும். ஏற்கெனவே பத்தாண்டுகளுக்கு முன்னர், 2016ல் இந்தப் புதிய தகவல் திரை சோதிக்கப்பட்டது.
எல்இடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பிற திரைகளைக் காட்டிலும், இந்த மின்னணு காகிதத் திரையைப் படிப்பது எளிதாக இருக்கும் என்றபோதிலும் கடும் சூரிய ஒளியின்கீழ் அந்தத் திரையின் காட்சி மங்கிப்போவது அந்தச் சோதனையின்போது கண்டறியப்பட்டது.
தற்போது தொழில்நுட்பம் முன்னேறியுள்ளதால், திறந்தவெளிச் சூழல்களில் பயணிகளுக்கான போக்குவரத்துத் தகவல்களைக் காண்பிப்பதில் அதன் செயல்திறன் எவ்வாறு இருக்கிறது என்பதை ஆணையம் மீண்டும் சோதிக்கத் தொடங்கியுள்ளது.
லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அந்தப் புதிய போக்குவரத்துத் தகவல் திரை பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
வரும் அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் அந்தப் புதிய காட்சித் திரையைச் சோதிப்பதற்காக ‘என்சிஎஸ்’ தொழில்நுட்பச் சேவை நிறுவனத்துடன் ஆணையம் கைகோத்துள்ளது.

