அடுத்த ஆண்டின் 2வது காலாண்டில் ஆண்களுக்காகவே புதிய நெருக்கடி கால தங்குமிடம் உருவாக்கப்படுகிறது.
அன்புக்குரியவர்களை காயப்படுத்தும் சூழலிலிருந்து தாங்களாகவே முன்வந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் வாய்ப்பாக இந்தத் தங்குமிடம் அமையும்.
லாப நோக்கற்ற அமைப்பான ‘ஃபெலோஷிப் ஆஃப் மென் சிங்கப்பூர்’ (எஃப்எம்எஸ்) இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்கிறது.
தங்களை காயப்படுத்திக் கொள்ளும் ஆபத்தில் உள்ளவர்கள், குடும்ப வன்முறையில் சிக்கி இருப்பிடத்தை மாற்ற விரும்புவோர் போன்றோருக்கு புதிய திட்டம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முன்னோடித் திட்டத்தின்கீழ் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக மூன்று ஆண்களுக்குத் தங்குமிடங்களை வழங்குவதற்காக மலிவுகட்டண ஹோட்டல்களைப் பயன்படுத்த எஃப்எம்எஸ் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் ஓர் ஆண்டில் 50 ஆண்களுக்கு உதவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வோர் ஆணும் அதிகபட்சமாக ஏழு இரவுகள் வரை கட்டணமின்றி தங்கலாம்.
சில ஆண்கள் வீவக புளோக்குகளின் கீழ்த் தளங்களிலும் கார்களில் அல்லது தெருக்களிலும் உறங்குகின்றனர். சிலர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தனியாகத் தவிக்கின்றனர்.
இத்தகைய சூழலில் தங்களின் நடத்தையால் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் நிலையில் இருக்கும் ஆண்களைச் சென்றடைய இந்த அமைப்பு விரும்புகிறது.
குடும்ப வன்முறையால் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பைத் தேடி வீட்டை விட்டு வெளியேறி காப்பகங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். அதற்குப் பதிலாக, பொருத்தமான சூழல்களில் நிலைமை மோசமடைவதற்கு முன்பாகவே ஆண்கள் தற்காலிகமாக வீட்டை விட்டு வெளியேறி ஆதரவைப் பெற முடியுமா என்பதை ஆராய விரும்புவதாக அந்த அமைப்பைச் சேர்ந்த டிடிஹ் தெரிவித்தார்.
குடும்ப வன்முறை காரணமாக மனைவியையும் குழந்தைகளையும் வெளியேற்றுவது அவர்களின் பாதுகாப்பிற்கு அவசியமானது. இருந்தாலும், அந்த ஆணுக்கு எந்த உதவியும் கிடைக்காமல் போனால் அவரது நடத்தை மாறாமல் போக வாய்ப்புள்ளது என்று அவர் விளக்கினார்.
முன்கூட்டியே தலையிடுவதன் மூலம், அந்த ஆண் கட்டுப்பாடற்ற தனது நடத்தைக்கு பொறுப்பு ஏற்று உதவி பெறவும் நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
