பள்ளியிலிருந்து வேலைக்குச் செல்வது வரையிலான முக்கிய வாழ்க்கைப் பருவ மாற்றங்களின்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் ஆதரவு அளிக்கக்கூடிய புதிய நடவடிக்கைகள் 2030க்குள் சிங்கப்பூரில் அமல்படுத்தப்படவுள்ளன.
சிறப்புப் பள்ளிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு வேலையிடச் சூழல் மற்றும் மென் திறன்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, வேலை அனுபவம் பெற கூடுதல் வாய்ப்புகளும் அளிக்கப்படும்.
தேசிய மாற்றுத்திறனாளிகள் அமைப்பான ‘எஸ்ஜி எனேபல்’, லெங்கோக் பாருவில் உள்ள ‘எனேபலிங் வில்லேஜ்’ வளாகத்தில் புதிய வேலைவாய்ப்பு உதவி அலுவலகத்தை நிறுவி தனது சேவைகளை விரிவுபடுத்தவுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், முதலாளிகள் இருசாராருக்கும் வேலைவாய்ப்பு தொடர்பான அம்சங்களில் அந்த அலுவலகம் உதவும்.
2027ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அது முழுமையாகச் செயல்படத் தொடங்கும்.
எதிர்காலப் பராமரிப்பு திட்டமிடலுக்கான ஆதரவு, அறிவுசார் குறைபாடு மற்றும் ஆட்டிசம் உள்ளவர்களைக் கையாள்வதற்கு பலதுறை மருந்தகங்களின் முன்வரிசை ஊழியர்கள் அனைவருக்கும் பயிற்சி அளித்தல், சமூகச் சேவைகளை விரிவுபடுத்துதல் ஆகியவை பிற நடவடிக்கைகளில் அடங்கும்.
‘மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கான உத்தரவாதப் பணிக்குழு’ ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) வெளியிட்ட 67 பக்க அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளில் இவையும் அடங்கும்.
மாற்றுத்திறனாளிகளின் வெவ்வேறு வாழ்க்கை நிலைகளில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆதரவை மதிப்பாய்வு செய்வதற்காக 2025 டிசம்பரில் இந்தப் பணிக்குழு உருவாக்கப்பட்டது.
அடுத்த ஐந்தாண்டுகளில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கான ஆதரவை வலுப்படுத்தும் நோக்கில், சராசரியாக 60 விழுக்காடு வரை கூடுதலாகச் செலவிட அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
மாற்றுத் திறனாளி சமூகத்திற்கு வேலைவாய்ப்பு என்பது தொடர்ந்து ஒரு சவாலாகவே உள்ளது. தற்போது, சிங்கப்பூரில் உள்ள மாற்றுத்திறனாளி குடியிருப்பாளர்களில் 34.7 விழுக்காட்டினர் வேலை பெற்றுள்ளனர். இதை 2030க்குள் 40 விழுக்காடாக உயர்த்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
தகவல் பரிமாற்றம் போன்ற வேலையிடத் திறன்களை வளர்த்துக் கொள்வது கடினமாக இருப்பதாகச் சிலர் தெரிவித்த வேளையில், தங்களுக்குப் பொருத்தமான வாய்ப்புகளைக் கண்டறிவதில் சிரமம் இருப்பதாக வேறு சில மாற்றுத்திறனாளிகள் குறிப்பிட்டனர்.
அதற்குத் தீர்வுகாணும் வகையில், கல்வி அமைச்சு, தேசிய பாடத்திட்டத்தை வழங்கும் பேத்லைட் போன்ற ஆட்டிசம் மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் செயல்முறை வழிக் கற்றல் மற்றும் வேலைச்சூழல் அனுபவங்களை அறிமுகப்படுத்தும்.
மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்துவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் கொண்ட சில்லறை வணிகம், நிதி, காப்பீட்டுச் சேவைகள் போன்ற துறைகளுக்கான வழிகாட்டிப் புத்தகங்களை உருவாக்கத் துறைசார் நிபுணர்களுடன் இணைந்து புதிய வேலைவாய்ப்பு ஆதரவு அலுவலகம் செயல்படும்.
பொருத்தமான வேலைகளைக் கண்டறிவது, வேலைகளை மறுவடிவமைப்பு செய்வது போன்றவை அதில் இடம்பெறும்.
