வெப்பத்தாக்கங்களைத் தணிக்கும் திட்டம்

வெப்பத்தாக்கங்களைத் தணிக்கும் திட்டம்

2 mins read
f9d608bf-21c8-40c3-984c-b0f4d35dac5c
வெப்பத் தடுப்புத் திறன் உத்தியை மேம்படுத்த வேண்டும் எனும் இலக்குடன் வெப்ப மீள்திறன் கொள்கை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.   - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தீவிரமடைந்து, சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் வெப்பம் தொடர்ந்து பாதித்து வருகிறது.

வெப்பத்தால் பொருளியல், மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் உட்பட அனைத்தையும் முழுமையாகக் கையாளவும், நாட்டின் வெப்பத் தடுப்புத் திறன் உத்தியை மேம்படுத்த வேண்டும் எனும் இலக்குடனும் வெப்ப மீள்திறன் கொள்கை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) நடைபெற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது இதனை அறிவித்தார்.

இந்த அலுவலகத்தை நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற அமைச்சு  நிறுவியதாகக் கூறிய திரு ஜனில், நாட்டின் வெப்ப மீள்திறன் முயற்சிகளுக்கான எதிர்காலப் பாதையை வகுக்கவும், அதற்கான முயற்சிகளை முன்னிறுத்தவும் தேசிய வளர்ச்சி அமைச்சு, சுகாதார அமைச்சு, மனிதவள அமைச்சு,  சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு  உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் முயற்சிகளை இது ஒன்றிணைக்கும் என்றார்.

செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், ஆராய்ச்சிகளைக் மேற்பார்வையிடுதல், அனைத்துலக அளவில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்தல் எனும் மூன்று முக்கிய வழிகளில் வெப்ப மீள்திறன் சார்ந்த முயற்சிகள் செயல்வடிவம் பெற உள்ளன.

கட்டமைப்பு, சுகாதாரம், பொருளியல் சமூகத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான வெப்ப மீள்திறன் செயல் திட்டத்தை இது உருவாக்கும். முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளையும் வெப்ப மீள்திறன் கொள்கை அலுவலகம் வடிவமைத்திடும்.

இதற்கிடையே, வெப்ப மீள்திறன் ஆராய்ச்சியில் திறனாற்றலையும் முதலீடுகளையும் மேம்படுத்த புத்தாக்கம், தொழில்முனைப்பு (ஆர்ஐஇ2030) வெப்ப மீள்திறன் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவித்தார் கல்விக்கான மூத்த துணை அமைச்சர் ஜனில்.

இத்திட்டம் வெப்ப மீள்திறன் சார்ந்த உள்கட்டமைப்புத் தலையீடுகள், சமூகத்தின் மீது வெப்பம் ஏற்படுத்தும் தாக்கங்களைப் புரிந்துகொள்ளுதல்,  நிர்வகித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளது. 

இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக, $40 மில்லியன் மதிப்பிலான “வெப்பத் தாக்கங்களுக்கு ஏற்பத் தகவமைத்தல்” நிதி ஆதரவுத் திட்டம் களம்காணவுள்ளது.

இது வெப்பத் தாக்கங்கள், சமூக வெப்ப மீள்திறன் போன்ற வளர்ந்து வரும் துறைகளுக்கான ஆராய்ச்சியைத் துரிதப்படுத்தும் என்றும் கூறினார் திரு ஜனில்.

‘‘பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப நம்மைத் தகவமைத்துக்கொள்ள கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. நீர், வெப்பம், வளங்களுக்கான மீள்திறனை வலுப்படுத்துவதற்கான அடுத்தகட்ட முயற்சிகளை திட்டமிடுகையில், ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க முடியும். 

‘‘இது இன்றைக்கும் எதிர்காலத்திற்குமான ஒரு தொலைநோக்குப் பார்வை. வீணடிக்க நேரமில்லை. அரசாங்கம், தொழில்துறை பொதுமக்கள் என அனைவரும், இன்றும் இன்னும் பல ஆண்டுகளுக்கும் வாழத்தகுந்த சிங்கப்பூரை உருவாக்க உதவ முடியும்,’’ என்று ஒருங்கிணைந்து செயல்படவும் அழைப்பு விடுத்தார் திரு ஜனில்.

குறிப்புச் சொற்கள்