‘எஸ்பிசிஏ’க்குப் புதிய நிர்வாக இயக்குநர்

1 mins read
36f58834-dd66-4187-8132-f2460424ec0b
வால்டர் லியோங். - படம்: எஸ்பிசிஏ

சிங்கப்பூரின் விலங்குவதைத் தடுப்புச் சங்கத்தின் (எஸ்பிசிஏ) புதிய நிர்வாக இயக்குநராக வால்டர் லியோங் நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ்பிசிஏ வெள்ளிக்கிழமை (ஜூலை 18) வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தது. திரு வால்டர் லியோங், 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து அப்பதவியை வகித்துவரும் 38 வயது ஆர்த்தி சங்கரிடமிருந்து அப்பொறுப்பை ஏற்கிறார்.

திரு லியோங், 59, தனியார், அரசாங்க, லாபநோக்கமற்ற துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார். பன்னாட்டு நிறுவனங்களில் செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பொறுப்புகள், அரசாங்க அமைப்புகளில் தலைமைத்துவப் பொறுப்புகள் உள்ளிட்டவை அவர் வகித்துள்ள பொறுப்புகளில் அடங்கும். வோளாண் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றையும் அவர் தொடங்கியிருக்கிறார்.

ஆக அண்மையில் அவர் சிங்கப்பூர் சுற்றுப்புற மன்றத்தின் (Singapore Environment Council) துணை நிர்வாக இயக்குநராகப் பதவி வகித்தார். திரு லியோங், நீடித்த நிலைத்தன்மை அம்சங்களைக் கடைப்பிடிப்பது, சுற்றுச்சூழல், விலங்கு நலன் ஆகிய அம்சங்களில் மிகுந்த அக்கறை காட்டுபவர் என்று எஸ்பிசிஏ குறிப்பிட்டது.

நிர்வாக இயக்குநராக திரு லியோங், எஸ்பிசிஏவின் செயல்பாடுகளைக் கவனிப்பார். அந்த அமைப்பின் விலங்கு நலன் திட்டங்கள், நிதி திரட்டும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்