சிங்கப்பூர் தேசிய கண் நிலையம் மே மாத தொடக்கத்தில் செங்காங் கண் மருந்தகத்தில் புதிய அறுவை சிகிச்சைக்கூடம் ஒன்றைத் திறந்துள்ளது. இதன்மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலேயே கூடுதல் நோயாளிகள் சிகிச்சை பெற முடியும்.
செங்காங் பொது மருத்துவமனையில் அமைந்துள்ள இந்த நிலையத்தில் கண் புரை போன்ற அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இது இங்கு அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது அறுவை சிகிச்சைக்கூடம் ஆகும்.
இந்தக் கண் மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 30,000 நோயாளிகள் வந்து செல்கின்றனர். கடந்த 2025ஆம் ஆண்டில், இங்குள்ள இரண்டு அறுவை சிகிச்சைக்கூடங்களில் 3,000க்கும் அதிகமான கண் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
தற்போது புதிய அறுவை சிகிச்சைக்கூடம் சேர்க்கப்பட்டுள்ளதால், ஆண்டுக்கு 5,000 அறுவை சிகிச்சைகள் வரை மேற்கொள்ள முடியும் என்று மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் வூ ஜியே ஹாவ் தெரிவித்தார்.
இதன்மூலம் நோயாளிகளுக்குக் கூடுதல் மருத்துவ வசதிகள் விரைவாகக் கிடைப்பதுடன், அறுவை சிகிச்சைக்கான காத்திருப்பு நேரமும் பேரளவில் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்ரம் வட்டாரத்தில் உள்ள முதன்மைக் கண் நிலையத்திலோ அல்லது பிற கிளைகளிலோ பரிசோதனை செய்துகொண்ட நோயாளிகளும்கூட செங்காங் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளத் தேர்வுசெய்யலாம்.
எனினும், விழிப்படல மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகள், ஊட்ரம் வட்டாரத்தில் உள்ள முதன்மை நிலையத்தில் தொடர்ந்து சிகிச்சை பெறுவர்.
சிங்கப்பூரின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதி குடியிருப்பாளர்களுக்குக் கண் மருத்துவச் சேவைகளை எளிதாகவும் வசதியாகவும் வழங்குவதற்காகத் தனது கிளைகளின் கட்டமைப்பை சிங்கப்பூர் தேசிய கண் நிலையம் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. குறிப்பாக, வயது முதிர்வு காரணமாகக் கண் நோய்களால் பாதிக்கப்படும் முதியோருக்கு சரியான நேரத்தில் குறைந்த செலவில் தரமான கண் பராமரிப்புச் சேவைகளை உறுதிசெய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

