சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சியின் (மசெக) 70ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாட பிடோக் 85 சந்தையில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செரில் சானும் அவரின் தொண்டூழியர்க் குழுவும் ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 17) குடியிருப்பாளர்களுக்கு ‘டெடி பேர்’ கரடி பொம்மைகளை வழங்கினர்.
மக்கள் செயல் கட்சி சட்டைகள் அணிவிக்கப்பட்ட அந்த பொம்மைகளை வழங்கியோரில் ஒருவர், 46 வயது மெலிசா டான். வா & ஹுவா (Wah & Hua) எனும் உள்ளூர் கழிவு நிர்வாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர், முதன்முறையாக ஃபெங்ஷானில் காணப்பட்டார்.
வரும் பொதுத் தேர்தலில் திருவாட்டி டான், மசெக-வின் புதிய வேட்பாளராகக் களமிறக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்டகாலமாக மக்கள் செயல் கட்சியின் தொண்டூழியராக இருந்துவரும் திருவாட்டி டான், ஓரிரு வாரங்களுக்கு முன்பிருந்து ஃபெங்ஷானில் மக்கள் செயல் கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார். இவர், முன்னதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் ஏமி கோரின் ஹொங் கா நார்த் தொகுதியில் பணியாற்றி வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொம்மை வழங்கும் நிகழ்வில் திருவாட்டி டான், திருவாட்டி சானுடன் சேர்ந்து வட்டாரவாசிகளைச் சந்தித்தார்.
இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டபோது திருவாட்டி டான், “கட்சியில் பல ஆண்டுகளாக இருப்பதால் மற்ற தொகுதிகளிலும் எவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அறிய நான் அவற்றுக்குச் செல்வேன்,” என்று பதிலளித்தார்.

