நீ சூன் குழுத்தொகுதியின் மக்கள் செயல் கட்சி (மசெக) நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) குடியிருப்பாளர்களைச் சந்தித்து அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர்.
அந்தக் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புதுமுகம் ஒருவர் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவுசார் சொத்து வழக்கறிஞரான டெரீன் சிம், 40, நீ சூன் நாடாளுமன்ற உறுப்பினர்களான உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம், லூயிஸ் இங், கேரி டான், டெரிக் கோ, உள்துறை மற்றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராகிம் ஆகியோருடன் காணப்பட்டார்.
ஈசூன் பகுதியில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஒன்றில் அவர்கள் கலந்துகொண்டனர்.
திருவாட்டி சிம், தொகுதிச் சுற்றுலாக்களில் உதவி வந்துள்ளதாகவும் அரசாங்க சார்பற்ற அமைப்புகளுக்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார் என்றும் திரு சண்முகம், நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் கூறினார்.
இவ்வாண்டு நவம்பர் மாதத்துக்குள் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் திருவாட்டி சிம், மக்கள் செயல் கட்சியின் சார்பில் போட்டியிடுவாரா என்பது குறித்து திரு சண்முகம் தகவல் வெளியிடவில்லை.
தாம் ஒரு மக்கள் செயல் கட்சி உறுப்பினர் என்பதை திருவாட்டி சிம் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். அறிவுசார் சொத்து வழக்கறிஞராக அவர், ஊடகம், கேளிக்கை ஆகியவை தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்துபவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு சண்முகம் மசெக கிளைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் சொங் பாங் தொகுதியில் திருவாட்டி சிம் தொண்டூழியராகச் சேவையாற்றி வருகிறார். சட்டத் துறையில் தனது அனுபவத்தைக் கொண்டு அவர் மக்கள் சந்திப்புக் கூட்டங்களில் குடியிருப்பாளர்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.
அண்மைக் காலமாகத் தான் பல நிகழ்ச்சிகளில் உதவி செய்து வருவதாக திருவாட்டி சிம் தெரிவித்தார். சொங் பாங்கில் மூத்த குடியிருப்பாளர்களுக்கு ‘ஹொங்பாவ்’ அன்பளிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி அவற்றில் அடங்கும்.