பொருளியல் உத்தி மறுஆய்வு தொடர்பான புதுப்பிப்பை அறிவித்த துணைப் பிரதமர் கான் கிம் யோங், அதுதொடர்பான ஐந்து புதிய குழுக்களில் இடம்பெறுபவர்களின் பட்டியலை வெளியிட்டார்.
முதல் குழு, சிங்கப்பூரின் உலகளாவிய போட்டித்தன்மையில் கவனம் செலுத்தும். அக்குழுவுக்குத் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சரும் நிதி மூத்த துணை அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ்வும் வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சரும் கலாசார, சமூக இளையர் துறை மூத்த துணை அமைச்சருமான லோ யென் லிங்கும் தலைமை தாங்குவர்.
இரண்டாவது குழு, பொருளியல் வளர்ச்சியையும் போட்டித்தன்மையையும் மேம்படுத்த தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற புத்தாக்கப் பயன்பாட்டில் கவனம் செலுத்தும்.
இக்குழுவுக்குத் தகவல், மின்னிலக்க மேம்பாடு மற்றும் கல்வி துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ்வும் கலாசார, சமூக, இளையர் துறை மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹான்யானும் தலைமை தாங்குவர்.
மூன்றாவது குழு, தொழில்முனைவில் கவனம் செலுத்தும். குறிப்பாக, சிங்கப்பூரின் புதிய நிறுவனங்கள் மீது அதன் கவனம் இருக்கும். இக்குழுவுக்கு வர்த்தக, தொழில் மற்றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஆல்வின் டானும் கலாசார, சமூக, இளையர் துறை மற்றும் மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாசும் தலைமை தாங்குவர்.
நான்காவது குழு, சிங்கப்பூரின் மனிதவளத்தில் கவனம் செலுத்தும். ஊழியர்களுக்குத் தேவையான திறன்களை ஏற்படுத்தித் தரும் பணியைப் பார்த்துக்கொள்ளும். இதன்மூலம் புதிய வேலைக்கு மாற தேவையான திறன், மீள்திறன் ஆகியவற்றுடன் ஊழியர்கள் மேம்படுவர். இக்குழுவுக்குத் தற்காலிக கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சரும் கல்வி மூத்த துணை அமைச்சருமான டேவிட் நியோவும் மனிதவளம் மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன்னும் தலைமை தாங்குவர்.
ஐந்தாவது குழு, பொருளியல் மறுசீரமைப்பால் வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் ஏற்படும் தாக்கங்களைச் சமாளிப்பதில் கவனம் செலுத்தும். இக்குழுவுக்கு உள்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் கோ பெய் மிங், தற்காப்புத் துணை அமைச்சரும் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் துணை தலைமைச் செயலாளருமான டெஸ்மண்ட் சூ தலைமை தாங்குவர்.
இந்தப் பத்து இணைத் தலைவர்களில் அறுவர் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு குழுவிலும் தனியார் துறை, தொழிற்சங்கங்கள், இதர பங்குதாரர்களைச் சேர்ந்த எட்டிலிருந்து 11 பேர் உள்ளனர்.
இந்த ஐந்து குழுக்கள் அடுத்த ஆண்டு (2026) நடுப்பகுதியில் பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையை வெளியிடும் என்று திரு கான் தெரிவித்தார்.
குழுக்களில் இடம்பெறுவோர் பற்றி கேள்வி எழுப்பப்பட்டதற்குத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் பதிலளித்தார். குறிப்பாக, அரசியல் பதவி வகிக்கும் புதியவர்கள் பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
சிங்கப்பூர் பொருளியல் மீள்திறன் பணிக்குழுவின்கீழ் மிக முக்கியமான மறுஆய்வு நடத்தப்படுவதாக திரு கான் குறிப்பிட்டார். தற்போதைய கட்டமைப்பில் அனுபவமிக்க அரசியல்வாதிகளும் புதிய அரசியல்வாதிகளும் இடம்பெறுவதை அவர் சுட்டினார்.

