கடலோர நகரத்திற்கு பசுமைகூட்ட பாசிர் ரிஸ் சாலை ஓரங்களில் கூடுதல் பூமரங்கள்

கடலோர நகரத்திற்கு பசுமைகூட்ட பாசிர் ரிஸ் சாலை ஓரங்களில் கூடுதல் பூமரங்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Nov 2026 - 7:36 pm

2 mins read

பாசிர் ரிஸ் வட்டாரக் கட்டுமானத் திட்டங்கள் வரும் ஆண்டுகளில் நிறைவடைய உள்ள நிலையில், அந்தக் கடலோர நகரத்தின் சாலைகளில் பசுமையை அதிகரிக்கும் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மென்மையான இளஞ்சிவப்பு, வெள்ளை, மஞ்சள் மற்றும் ஊதா நிறத்திலான மலர்களை வாரி வழங்கும் சிங்கப்பூர் சகுரா மற்றும் கோல்டன் பெல்ஸ் மரங்களும் புதர்ச்செடிகளும் சாலைகளின் ஓரங்களில் நடப்பட உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) பாசிர் ரிஸ் ஈஸ்ட்டில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, இந்தப் புதிய மரம் நடும் திட்டங்களை அறிவித்தார்.

பாசிர் ரிஸ்ஸிலும் அதன் உள்கட்டமைப்பிலும் பசுமையை இணைப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்றார் அவர்.

அதன் மூலம் பாசிர் ரிஸ் நகரம் இனிமையானதாகவும் வாழ்வதற்கு உகந்த இல்லமாகவும் திகழும் என்று தெரிவித்தார் பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான குமாரி இந்திராணி.

“பாசிர் ரிஸ் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், நமது பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் கவனமாகத் திட்டமிட வேண்டும்.

“எனவே, பாசிர் ரிஸ்ஸில் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாடுகள் நிறைவடைவதற்கு ஏற்ப, இயற்கை வழித்தடங்களும் படிப்படியாக அமைக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.

தேசிய பூங்காக் கழகத்தின் ‘இயற்கை வழித்தடங்கள்’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சாலையோர மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

காடுகளின் இயற்கையான அடுக்கு அமைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், குறிப்பிட்ட மரங்கள் மற்றும் புதர்ச்செடிகள் நடப்படும் பாதைகளே இயற்கை வழித்தடங்கள் ஆகும்.

பாசிர் ரிஸ்ஸில் ஏற்கெனவே ஏறத்தாழ 1.7 கி.மீ தூரத்திற்கு இந்த வழித்தடங்கள் உள்ள நிலையில், புதிதாக அமைக்கப்பட உள்ள இயற்கை வழித்தடங்கள் முழுமையடையும் போது கிட்டத்தட்ட 6.3 கி.மீ தூரத்திற்கு அது நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக மரம் நடும் பணிகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும்.

பாசிர் ரிஸ் கடைத்தொகுதி, புதிய பாசிர் ரிஸ் பேருந்து நிலையம் போன்ற பல மேம்பாட்டுத் திட்டங்கள் இப்பகுதியில் அண்மையில் நிறைவடைந்துள்ளன.

அதேவேளை, எதிர்கால வீடமைப்புத் திட்டங்கள், குறுக்குத் தீவு ரயில் பாதை போன்ற உள்கட்டமைப்புத் திட்டப் பணிகள் இந்த வட்டாரத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குறிப்புச் சொற்கள்