2030க்குள் பேஷோர் - ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயை இணைக்கும் புதிய மேம்பாலச் சாலை

2 mins read
9065ae24-ae5e-4b72-877e-42b9f440f311
பேஷோர் அவென்யுவில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணி. பிடோக் சவுத் சாலையை ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே (இசிபி) வரை நீட்டிக்க, லகுனா மேம்பாலத்துக்கும் தானா மேரா மேம்பாலத்துக்கும் இடையே, புதிய வாகன மேம்பாலச் சாலை கட்டப்பட உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேஷோரையும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயையும் (இசிபி) இணைக்கும் புதிய மேம்பாலச் சாலை 2030ஆம் ஆண்டுக்குள் கட்டப்படவுள்ளது.

பேஷோர் மேம்பாலச் சாலை என்ற அந்தப் புதிய மேம்பாலச் சாலை இணைப்பை மேம்படுத்துவதன் மூலம், பேஷோர், அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளில் தற்போதுள்ள மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள மேம்பாடுகளுக்குச் சேவையாற்றும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (பிப்ரவரி 24) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

கட்டுமானப் பணிகள் 2026ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் 2029ஆம் ஆண்டிலிருந்து கட்டம் கட்டமாக மேம்பாலச் சாலை தயாராகிவிடும் என்றும் ஆணையம் கூறியது. 2030ல் அது முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 18ஆம் தேதி அரசாங்க கொள்முதல் இணையத்தளம் GeBiz தளத்தில் நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களின்படி, பேஷோர் அவென்யூவை புதிய மேம்பாலச் சாலையுடன் இணைக்கும் இரட்டை நான்கு வழிச் சாலையை அமைப்பது, லகுனா மேம்பாலச் சாலை அருகே நகரை நோக்கிச் செல்லும் இசிபி சாலையை அகலப்படுத்தப்படுவதும் அதில் அடங்கும்.

பேஷோர் சாலை நெடுகிலும் உள்ள சந்திப்புகளில் இரண்டு புதிய துணைச் சாலைகள், ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவுடன் இணைக்கும் புதிய மேம்பாலத்துக்கான பாதசாரி படிக்கட்டுகள், இசிபி சாலை முதல் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா வழிச் சாலை வரையுள்ள பூங்கா இணைப்பை இணைக்க புதிய சைக்கிள் பாதை ஆகியவை ஏனைய மேம்பாடுகளில் அடங்கும்.

400 மீட்டர் ‘போக்குவரத்து முன்னுரிமை நடைபாதை’ அமையவிருக்கும் பேஷோர் டிரைவில் நான்கு புதிய பேருந்து நிறுத்தங்களை அமைக்க ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும் ஆவணங்கள் காட்டுகின்றன. பேருந்து மட்டுமே செல்லும் பாதைகள், நடைபாதைகள், சைக்கிள் பாதைகள், பரந்த அளவிலான கூரைகள் கொண்ட நடைபாதைகள் ஆகியவை அதில் இடம்பெறும்.

வரும் 2030களின் நடுப்பகுதியில், 7,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புகள், 3,000 தனியார் வீடுகளுடன் பேஷோரில் 10,000 புதிய வீடுகளைக் கொண்டிருக்கும். இவற்றில் இரண்டு தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) திட்டங்கள். இவை 2029 இரண்டாவது காலாண்டில் தயாராகிவிடும்.

அந்தப் பகுதி கார் அற்ற பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 150 கி. மீ பூங்கா இணைப்பு, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, சாங்கி கடற்கரையை இணைக்கும் வரவிருக்கும் 15 கி. மீ பசுமைப் பாதை உள்ளிட்ட தீவு முழுவதுமுள்ள பாதைகளை இணைக்கும் சைக்கிள் பாதை, நடைபாதைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

2025 இரண்டாம் பாதியில் குத்தகை ஒப்பந்தம் வழங்கப்படும்போது திட்டம் குறித்த மேல்விவரங்கள் வழங்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்