இளையர்களின் வேலைப் பாதுகாப்பை மேம்படுத்த புதிய கட்டமைப்பு

2 mins read
9634e463-ac42-4561-9d3d-2d2e90afce72
வேலை நியமன, வேலைத் தகுதிக் கழகம் முதன்முறையாக ‘பல்கலைக்கழகப் பட்டதாரிகள் வேலைச் சந்தை’யை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) நடத்தியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

இளையர்களின் வாழ்க்கைத்தொழில் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் வேலை நியமன, வேலைத் தகுதிக் கழகம் (e2i) புதிய கட்டமைப்பு ஒன்றை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) அறிமுகப்படுத்தியது.

தனது முதலாவது ‘பல்கலைக்கழகப் பட்டதாரிகள் வேலைச் சந்தை’ நிகழ்வில் இ2ஐ அதனை அறிமுகம் செய்தது.

வேலைப் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ள நிலையில், ஆயத்தம், தொடர்பு, முன்னேற்றம் (Prepare, Connect, Advance) எனும் அக்கட்டமைப்பானது, புதிய, இளநிலைப் பட்டதாரிகளுக்கு ஆதரவு அளிப்பதில் இ2ஐ அமைப்பு கவனம் செலுத்தி வருவதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இளையர்கள் தாங்கள் பட்டம் பெற்றதும் தங்கள் முதலாவது அல்லது இரண்டாவது வேலையில் நம்பிக்கையோடு சேர்வதற்கு உதவ இப்புதிய கட்டமைப்பு இலக்கு கொண்டுள்ளது.

என்டியுசி துணைத் தலைமைச் செயலாளரும் பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சருமான டெஸ்மண்ட் டானும் கல்வி மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியும் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

புதிய, இளநிலைப் பட்டதாரிகள் வேலை தேடுவதற்கு ஆயத்தமாகும் வகையில், வாழ்க்கைத்தொழில் ஆலோசனை, வேலைப் பயிற்சி, தொழில்துறை வல்லுநர்களின் ஆலோசனை போன்ற வழிகளில் உதவி வழங்கப்படும்.

அதன்பின் நேரடி வேலை நேர்காணல்கள், நிறுவனங்களுடனான இணைப்பு அமர்வுகள் போன்றவை மூலம் அவர்களுக்குத் தொடர்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.

அத்துடன், தொழில்துறைப் பங்காளிகள், நிபுணத்துவ அமைப்புகள், சமூகக் கட்டமைப்புகளுடனான ஈடுபாட்டு நடவடிக்கைகள் வழியாக வேலை தேடுவோர்க்கு ஆதரவு வழங்கப்படும்.

தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிலைய மாணவர்களுக்கு வாழ்க்கைத்தொழில் சார்ந்த கூடுதல் வளங்களைக் கொண்டுசெல்வதிலும் இ2ஐ கடப்பாடு கொண்டுள்ளது.

“பட்டம் பெறுவதற்கு முன்பே வாழ்க்கைத்தொழில் குறித்து வழிகாட்டப்பட வேண்டும் என நம்புகிறோம். எங்களது வளங்களையும் நிபுணத்துவத்தையும் இளநிலைப் பட்டதாரிகளிடம் கொண்டுசெல்வதன் மூலம், அவர்கள் தங்கள் ஆர்வங்களை ஆராயவும், தேவையான திறன்களை அடையாளம் காணவும், அதிகத் தெளிவு, நம்பிக்கையுடன் தங்களது அடுத்த அடியை எடுத்து வைக்கவும் அவர்களுக்கு உதவுகிறோம்,” என்று இ2ஐ தலைமை நிர்வாக அதிகாரி கேரின் லிம் கூறினார்.

வேலை தேடுவதில் உள்ள சவால்களை இளையர்கள் புரிந்துகொள்ளச் செய்வதிலும் அவர்களது வாழ்க்கைத்தொழிலிலும் உடல்நலத்திலும் ஆதரவளிப்பதிலும் என்டியுசி கடப்பாடு கொண்டுள்ளதாகத் திரு டெஸ்மண்ட் டான் தெரிவித்தார்.

பொருத்தமான வேலைகளை அடையாளம் காண ஏதுவாக மாணவர்கள் - நிறுவனங்கள் நேரடித் தொடர்பு நிகழ்ச்சிகள், மதியுரைத் திட்டங்கள், தொழில்துறை சார்ந்த உரையாடல்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த நிறுவனங்களில் கற்றல் பயணங்கள் என இளையர் சார்ந்த வேறு பல திட்டங்களையும் இ2ஐ செயல்படுத்தவுள்ளது.

குறிப்புச் சொற்கள்