வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் கடுமையான இரைச்சலை ஏற்படுத்துவோரை விசாரிக்கவும் அத்தகையோர்மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உரிமை வழங்கும் புதிய சமூகத் தொடர்புப் பிரிவு தெம்பனிஸ் வட்டாரத்தில் அதன் ஓராண்டு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
வீடுகளில் அளவுக்கு அதிகமாகப் பொருள்களைக் குவித்து வைப்போர்மீதும் புதிய சமூகத் தொடர்புப் பிரிவு அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியும்.
இணக்கத்துடன் வாழ்வதை உறுதிசெய்யும் இதர முயற்சிகளுக்குப் புதிய பிரிவு கைகொடுக்கும் என்று தேசிய வளர்ச்சிக்கான மூத்த துணையமைச்சர் சிம் ஆன் திங்கட்கிழமை (ஏப்ரல் 7) ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
தொடக்கக் கட்டமாகப் புதிய சமூகத் தொடர்புப் பிரிவில் 15 முழுநேர அதிகாரிகள் உள்ளனர்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக அதிகாரிகள், இதர முன்னணி அதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனைக்குப் பிறகும் இரைச்சல் குறித்த விவகாரம் தீர்க்கப்படாமல் இருந்தால் சமூகத் தொடர்புப் பிரிவு அதிகாரிகள் தலையிடுவார்கள்.
இதர பேட்டைகளைவிட தெம்பனிஸ் வட்டாரத்தில் கூடுதலான சம்பவங்கள் பதிவானதால் முன்னோட்டத் திட்டம் அங்கு அறிமுகம் கண்டதாக திருவாட்டி சிம் சொன்னார்.
சென்ற ஆண்டு நவம்பரில் சமூக சர்ச்சைத் தீர்வு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் மூலம் சமூகத் தொடர்புப் பிரிவு அதிகாரிகளுக்குச் சில உரிமைகள் வழங்கப்பட்டன.
சம்பந்தப்பட்ட தரப்பினர் சமூக சமரச நிலையங்களுக்குக் கட்டாயமாகச் செல்லவேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பது அவற்றுள் ஒன்று. அதோடு கூடுதல் விசாரணைகள் நடத்தவும் இரைச்சலைக் கண்டறியும் உணர்கருவிகளைப் பொருத்தவும் எச்சரிக்கைகள் விடுக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அடுத்தவர்களுக்கு இன்னல் ஏற்படுத்தும் வகையில் அளவுக்கு அதிகமான பொருள்களைச் சேர்த்து வைத்திருப்போரின் வீடுகளுக்குள் நுழையவும் பொருள்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு இணங்க மறுப்பது தண்டைக்குரிய குற்றமாகக் கருதப்படும். அத்தகைய குற்றம் புரிவோருக்கு அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.


