தாங்கள் வழங்கும் ஆதரவு நடவடிக்கைகள், மூத்தோர் பராமரிப்புச் சேவைகளை விரிவுபடுத்த உதவும் வகையில் 10 சமூக சேவை அமைப்புகளுக்குப் புதிய மானியம் வழங்கப்படுகிறது.
இன்கம் ஆரஞ்ச்எயிட் பராமரிப்புச் சேவை ஆதரவு மானியம் (Income OrangeAid Caregiver Support Accelerator Grant), சம்பந்தப்பட்ட சமூக சேவை அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது. இன்கம் ஆரஞ்ச்எயிட், இன்கம் இன்ஷுரன்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் சமூக மேம்பாட்டுத் தளமாகும்.
இந்த மானியத்தை முதன்முறை பெறும் அமைப்புகள் குறித்து இன்கம் இன்ஷூரன்சும் தேசிய சமூகச் சேவை மன்றமும் கடந்த மார்ச் 10ஆம் தேதி அறிவித்தன.
இந்த மானியம் 10 மில்லியன் வெள்ளி மதிப்பிலானது. அதிகபட்சமாக 20 பராமரிப்புத் திட்டங்களுக்கு இது கைகொடுக்கும். அடுத்த ஆண்டு இரண்டாவது முறையாக விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பராமரிப்பாளர்களை மையமாகக் கொண்ட திட்டங்களுக்குத் தற்போது அதிக நிதியுதவி இல்லை என்று புதிய மானியத்தைப் பெற்றுள்ள பல அமைப்புகள், ஸ்ட்ரெடய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன. வீட்டில் வழங்கப்படும் பராமரிப்புச் சேவைக்கான மானியம், பராமரிப்பாளர் பயிற்சி மானியம் (Home Caregiving Grant, Caregivers Training Grant) போன்றவை் பராமரிப்புச் சேவைகளுக்கான செலவைக் குறைக்க அல்லது பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி வழங்க உதவுகின்றன.
ஆனால், பராமரிப்பாளர்களின் நலன்மீது அவை கவனம் செலுத்துவதில்லை. பராமரிப்பாளர்களோ அதிகச் சுமையை எதிர்கொள்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பராமரிப்பாளர்கள், குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் முக்கியமானவர்கள். ஆனால், அவர்களின் தேவைகள் பல வேளைகளில் கருத்தில்கொள்ளப்படுவதில்லை என்றார் ‘இன்கம் இன்ஷுரன்ஸ்’ தலைமை நிர்வாகி ஆண்ட்ரூ இயோ.
பராமரிப்பாளர்களுக்கென இருக்கும் திட்டங்கள் பல குறுகிய காலத்துக்கானவையாக இருப்பதாகவும் அவர் சுட்டினார். இதுபோன்ற குறைகளைப் புதிய மானியம் சரிசெய்வதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மானியம் வழங்கப்படும் ஒவ்வொரு திட்டத்துக்கும் முதல் ஈராண்டுகளுக்கு 200,000 வெள்ளி வரை நிதியுதவி வழங்கப்படும். மூன்றாவது ஆண்டில் 100,000 வெள்ளி வரை வழங்கப்படும்.
2025லிருந்து 2027ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட நிதியாண்டுகளில் மானியத்தின்கீழ் வழங்கப்படும் ஒவ்வொரு வெள்ளிக்கும் அரசாங்கம், எஸ்ஜி கிவ்ஸ் இணை மானியத்தின் மூலம் 1.50 வெள்ளி நிதி வழங்கும்.
இந்த நிதியுதவி, நிதி திரட்டுவதன் தொடர்பில் தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்குதலைச் சமாளிக்கவும் பராமரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்த அல்லது கூடுதலானோர் பலனடையும் வகையில் விரிவுபடுத்தவும் உதவும் என்று புதிய மானியத்தைப் பெறும் அமைப்புகள் கூறியுள்ளன.

