தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
அமெரிக்கத் தீர்வைகளின் எதிரொலி

சிங்கப்பூர் நிறுவனங்களுக்குக் கைகொடுக்க $100,000 வரை புதிய மானியம்

3 mins read
0fc07ea7-220d-42c4-8e48-078eb418fe23
துணைப் பிரதமர் கான் கிம் யோங் மருத்துவக் கருவிகளை உற்பத்தி செய்யும் ஃபோர்ஃபிரன்ட் மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) பார்வையிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அமெரிக்க வரிகளால் சிரமப்படும் உள்ளூர் நிறுவனங்கள் இப்போது புதிய மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

மூன்றாம் தரப்பு ஆலோசனைச் சேவைகளைப் பெறுவதற்கும் விநியோக நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதற்கும் அவை மானியத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பிசினஸ் அடாப்ட்டே‌ஷன் கிரான்ட் (Business Adaptation Grant) என்று அந்த மானியம் வழங்கப்படுகிறது. தீர்வைகளால் பாதிக்கப்படக்கூடிய நிறுவனங்களுக்கு ஆதரவுதருவது அதன் நோக்கம்.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அவற்றுக்காகும் செலவில் 50 விழுக்காடுவரை மானியம் தருமாறு கோரலாம். பெரிய நிறுவனங்கள் 30 விழுக்காடுவரை மானியம் கேட்டு விண்ணப்பிக்க முடியும். ஒவ்வொரு நிறுவனமும் அவ்வாறு பெறக்கூடிய மானியத்தின் உச்ச வரம்பு $100,000.

என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு புதிய மானியத்தைத் தொடங்கியுள்ளது. வர்த்தக மானிய இணையவாசலில் அதற்கு விண்ணப்பிக்கலாம். மானியத்துக்கு 2027ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதிவரை அதாவது ஈராண்டு காலத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

சிங்கப்பூர்ப் பொருளியல் மீள்திறன் பணிக்குழு, மானியத்தைப் பற்றி முதன்முதலாக அறிவித்தது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உலக அளவில் புதிய தீர்வைகளை விதிக்கப்போவதாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பணிக்குழு உருவாக்கப்பட்டது. உலகில் நிலவும் அரசியல் பதற்றத்தாலும் தொழில்நுட்ப இடையூறுகளாலும் பல நாடுகளின் பொருளியல் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பு மேலும் தாக்கத்தை உண்டாக்கியது.

அமெரிக்கா இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தீர்வைகளை விதித்தது. மருந்தாக்கத் துறைக்குப் புதிய தீர்வைகளை அக்டோபர் முதல் தேதி விதிக்க அது திட்டமிட்டிருந்தது. ஆனால், அதனை வா‌ஷிங்டன் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை.

இங்குள்ள ஏராளமான நிறுவனங்கள், அவற்றின் விநியோக நடவடிக்கைகளில் மாற்றம் செய்யத் தொடங்கியிருப்பதாகச் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் துணைத் தலைவர் மார்க் லீ கூறினார். பொருள்களின் விநியோகம், உற்பத்தி, பயனீட்டாளர் சந்தை முதலியவற்றுக்கு மாற்று இடங்களை நாடத்தொடங்கியிருப்பதாக அவர் சொன்னார்.

இன்றைய நிச்சயமற்ற வர்த்தகச் சூழலில் ஒவ்வொரு வெள்ளியும் முக்கியம் என்று குறிப்பிட்ட திரு மார்க் லீ, மாற்று இடங்களைக் கண்டறிய மானியம் கைகொடுக்கும் என்றார்.

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்குப் புதிய மானியம் துணைபுரியும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்தார். சில நிறுவனங்கள், மற்றச் சந்தைகளுக்குப் பொருள்களை அனுப்பி, அதன் பிறகு அங்கிருந்து உற்பத்தி செய்யப்படுபவற்றை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றன. அத்தகைய நிறுவனங்களுக்கும் தீர்வைகள் விதிக்கப்படுகின்றன.

இப்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் விதிக்கப்படும் தீர்வைகளால் ஏற்படக்கூடிய தாக்கத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று பணிக்குழுவின் தலைவருமான திரு கான் சொன்னார்.

அத்தகைய தாக்கத்தைப் புதிய மானியம் தணிக்க உதவும் என்றார் அவர். அத்துடன் புதிய வாய்ப்புகளைப் பெறவும் அது வழியமைக்கும் என்று திரு கான் குறிப்பிட்டார். ஈராண்டுக்குப் பிறகும் மானியத்தை நீட்டிப்பது குறித்து அரசாங்கம் பின்னர் முடிவெடுக்கும் என்று திரு கான் கூறினார்.

மருத்துவக் கருவிகளை உற்பத்தி செய்யும் ஃபோர்ஃபிரன்ட் மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) பார்வையிடச் சென்றிருந்தபோது துணைப் பிரதமர் கான் செய்தியாளர்களிடம் பேசினார்.

குறிப்புச் சொற்கள்