புக்கிட் தீமாவில் முதியோர் நலனுக்கான புதிய ‘ஷாப்பிங்’ திட்டம் தொடக்கம்

புக்கிட் தீமாவில் முதியோர் நலனுக்கான புதிய ‘ஷாப்பிங்’ திட்டம் தொடக்கம்

2 mins read
c841b643-0477-47a8-aaa4-31ab6f4745e8
முதல் பயணத்தில் முதியோருடன் இணைந்தார் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியின் அடித்தள ஆலோசகரும் உள்துறை, வெளியுறவு மூத்த துணையமைச்சருமான சிம் ஆன். - படம்: சாவ்பாவ்

புக்கிட் தீமாவில் வசிக்கும் முதியவர்கள் 46 பேர் புதன்கிழமை (பிப்ரவரி 4) ஒன்றிணைந்து மளிகைப் பொருள்கள் வாங்கினார்கள்.

வட்டாரத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட ‘முதியோருக்கான மளிகைப் பொருள்கள் வாங்கும் பயணம்’ திட்டத்தின்கீழ் முதன்முறையாக அந்நடவடிக்கை இடம்பெற்றது.

புக்கிட் தீமா பிளாசாவிலுள்ள ‘ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட்’ பேரங்காடிக்கு அம்முதியோர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

புக்கிட் தீமா அடித்தள அமைப்பின் குடிமக்கள் ஆலோசனைக் குழு மற்றும் ‘பிசிஎஸ் சிடார் ட்ரீ’ துடிப்புடன் மூப்படைதல் நிலையத்தின் ஏற்பாட்டில் ஐந்து முன்னோடித் திட்டங்களுக்குப்பின் அதிகாரபூர்வமாக இது தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு மாதத்தின் முதல் புதன்கிழமையன்று ஏறத்தாழ இரண்டு மணி நேரத்துக்கு முதியோர் மளிகைப் பொருள்கள் வாங்க இலவச இருவழிப் பேருந்துச் சேவையும் வழங்கப்படுகிறது.

முதல் பயணத்தில் முதியோருடன் இணைந்தார் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியின் அடித்தள ஆலோசகரும் உள்துறை, வெளியுறவு மூத்த துணையமைச்சருமான சிம் ஆன்.

கனமான, அதிக மளிகைப் பொருள்களை வீட்டிற்குக் கொண்டுவருவதில் சிரமப்படுவதாக புக்கிட் தீமாவின் மூத்த குடியிருப்பாளர்கள் தெரிவித்ததைத் திருவாட்டி சிம் ஆன் சுட்டிக்காட்டினார்.

“இந்தத் திட்டத்தின்வழி எங்களால் மூத்த குடிமக்களின் சமூகத் தேவைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும், இதர பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுவதிலும், மூத்தோரின் முக்கிய சமூகப் பங்கையும் இந்த முயற்சி எடுத்துக்காட்டுகிறது,” என்று தமிழ் முரசிடம் திருவாட்டி சிம் ஆன் தெரிவித்தார்.

இலவச பேருந்துச் சேவை இருப்பதனால் பொருள்கள் வாங்க வெகுதொலைவு நடக்கத் தேவையில்லை என்று தெரிவித்தனர் விஜயன்-சந்திரா இணையர்.
இலவச பேருந்துச் சேவை இருப்பதனால் பொருள்கள் வாங்க வெகுதொலைவு நடக்கத் தேவையில்லை என்று தெரிவித்தனர் விஜயன்-சந்திரா இணையர். - படம்: கீர்த்திகா ரவீந்திரன்

இலவசப் பேருந்துச் சேவை இருப்பதால் பொருள்கள் வாங்க இனி வெகுதொலைவு நடக்கத் தேவையில்லை என்று தெரிவித்தனர் விஜயன்-சந்திரா தம்பதியினர்.

“எதிர்காலத்தில் இந்தப் பயணங்கள் மாதத்திற்கு இரண்டு முறையாக அதிகரிக்கப்பட வேண்டும்,” என்று தமது விருப்பத்தைத் தெரிவித்தார் திரு விஜயன்.

தற்போது, ​​இந்தத் திட்டம் ஏறத்தாழ 40 மூத்த புக்கிட் தீமா குடியிருப்பாளர்களை வரவேற்கிறது.

வரும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஃபேர்பிரைஸ் குழுமம், வந்திருந்த ஒவ்வொரு முதியவர்க்கும் $20க்கும் மேல் மதிப்புள்ள பண்டிகைப் பராமரிப்புப் பை ஒன்றையும் வழங்கியது.

குறிப்புச் சொற்கள்