கட்டுமானச் சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் சவால்களை ஆராயப் புதிய குழு

கட்டுமானச் சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் சவால்களை ஆராயப் புதிய குழு

2 mins read
f38a3d70-08db-4f6b-928f-eca4e4b0cfd0
ஸ்கால் கட்டுமான நடுவத்தின் புத்தாக்க நிலையத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) விமான மாதிரியைத் தொட்டுப் பார்த்தார் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட். - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கட்டுமானச் சுற்றுச்சூழலால் ஏற்படும் சவால்களை ஆராய்வதற்குப் புதிய பணிக்குழு நிறுவப்பட்டுள்ளது. கருத்துகள் எவையேனும் இருந்தால் அவற்றை வெளிப்படையாகச் சொல்லுமாறு தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் தொழில்துறையினரைக் கேட்டுக்கொண்டார்.

“எந்த அம்சங்களையாவது மாற்ற வேண்டும் என்றாலோ சில விதிமுறைகள் காலத்திற்குப் பொருத்தமற்றவையாக உள்ளன என்று கருதினாலோ தயவுசெய்து அவற்றை எங்களிடம் சொல்லுங்கள்,” என்று அவர் சொன்னார்.

சிங்கப்பூர்க் குத்தகையாளர் சங்கத்தின் (ஸ்கால்) கட்டுமான நடுவத்தை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) தொடங்கிவைத்துத் திரு சீ பேசினார்.

உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும் தொழில்நுட்ப முயற்சிகளைக் கூட்டுவதில் பணிக்குழு கவனம் செலுத்தும். தொழில்துறையினர் எதிர்நோக்கும் சவால்களைக் கண்டறியவும் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் சிக்கல்கள் இருந்தால் அவற்றைக் குறைக்கவும் முயற்சி எடுக்கப்படும். நேரம், செலவு, மனிதவளம் ஆகியவற்றை மேலும் மிச்சப்படுத்தப் பணிக்குழு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

“சிங்கப்பூரின் கட்டுமானச் சுற்றுச்சூழல் தொழில்துறை எதிர்நோக்கும் சவால்களைக் கையாளப் பணிக்குழு நடவடிக்கை எடுக்கும். தொழில்துறையை எவ்வாறு திட்டமிட்டு, நிர்வகித்து, வளர்ப்பது என்பதைக் குழு மறுஆய்வு செய்யும்,” என்று திரு சீ கூறினார்.

பணிக்குழுவுக்குத் திரு சீ தலைமை தாங்குவார். அரசாங்க அமைப்புகளையும் தொழில்துறையையும் சேர்ந்த கட்டட மேம்பாட்டாளர்கள், ஆலோசகர்கள், நிர்வாகிகள், கல்வியாளர்கள் முதலியோர் அதில் இடம்பெற்றிருப்பர்.

தேசிய வளர்ச்சி, வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான் பணிக்குழுவின் துணைத் தலைவராகச் செயல்படுவார்.

கட்டுமானத் துறை எதிர்நோக்கும் முக்கியச் சவால்களில் ஒன்று, திறன்பெற்ற சிங்கப்பூரர்களை ஈர்ப்பது என்று குத்தகையாளர் சங்கத்தின் தலைவர் லீ கே சாய் கூறினார். அவர் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளார். கட்டுமானத் துறையில் இருக்கும் வேலைகள் குறித்த பார்வையைப் பணிக்குழுவின் மூலம் மாற்றமுடியும் என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

“கட்டுமானத் துறை வேலை என்பது கடினமானது என்றும் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் மக்கள் நினைக்கின்றனர். ஆனால் தற்போதைய காலத்தில் அப்படி இருக்கவேண்டிய அவசியமில்லை,” என்றார் திரு லீ.

கட்டுமானத் துறையில் பணிபுரியும் நிபுணத்துவத் தொழிலர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், பொறியாளர்கள் ஆகியோரில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளுமே என்று தாம் மதிப்பிடுவதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்