சமரச உத்தரவுக் கட்டமைப்பின்கீழ் இனி தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் சச்சரவில் ஈடுபடும் அண்டைவீட்டாரைச் சமரசத்தில் ஈடுபடுத்த சமூக சமரச மன்றத்திற்குச் செல்லுமாறு வலியுறுத்த முடியும்.
மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலில் புதன்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற சட்ட அமைச்சின் சமரச அதிகாரிகள் நியமன, பாராட்டு, விருதளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் இதனைத் தெரிவித்தார்.
சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளையும் சட்ட, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவாவும் அவருடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
“சிங்கப்பூரில் அண்டைவீட்டாருக்கு இடையேயான சச்சரவுகளைக் கையாளும் அணுகுமுறை, சீரான தொடர்பையும் ஒருமித்த புரிதலையும் மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
“ஆனால், பல வேளைகளில் சச்சரவுகளைத் தீர்க்க நல்லெண்ணம் ஒன்று மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. ஆகையால், இப்புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன,” என்றார் அமைச்சர் டோங்.
அண்டைவீட்டார் சச்சரவு குறித்த புகார்களைக் கையாள சமூகத் தொடர்புப் பிரிவையும் விரிவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதிகாரிகள் புகார்களை விசாரித்து எச்சரிக்கை விடுப்பதோடு, தொல்லை தருவதை நிறுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சமரசம் வழியாக இணக்கத்தை எட்டுவோர், ஒருமித்த சம்மதத்துடன் தங்கள் உடன்பாட்டை சமூகப் பூசல்களைத் தீர்த்துவைக்கும் தீர்ப்பாயத்தின் உத்தரவாகப் பதிவு செய்யலாம்.
இந்த மாற்றங்கள், குடியிருப்பாளர்களுக்குச் சச்சரவுக்குத் தீர்வுகாண கூடுதல் வழிகளையும் வழங்குகிறது என்றார் அமைச்சர் டோங்.
அண்டைவீட்டார் கருத்து வேறுபாடுகளைக் களைய ஊக்குவிப்பது, சமூக ஆதரவு வழங்குவது, தேவைப்படும்போது அரசாங்க அதிகாரத்தின்வழி தலையிடுவது ஆகியவற்றுக்கிடையே சமநிலை காண்பதை இம்முயற்சிகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
சச்சரவைச் சட்டபூர்வமாகத் தீர்ப்பதையும் தாண்டி, அண்டைவீட்டாரிடையே உறவுகளைச் சரிப்படுத்த, புரிந்துணர்வு ஏற்படுத்த, நம்பிக்கையை மீட்டெடுக்க சமரசம் அவசியம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் 10ஆம் ஆண்டு சேவை விருதை வென்ற திரு ராம் நரேன் துபே, இப்புதிய முயற்சிகள் அண்டைவீட்டாருக்கு இடையேயான சச்சரவைச் சுமுகமாகத் தீர்க்க உதவும் என நம்புகிறார் .
“பிரச்சினைகளைப் பொதுவெளியில் அனைவருக்கும் தெரியும் வண்ணம் சண்டையிட்டு தீர்க்காமல் நேர்த்தியான வழிகளில் தீர்க்க இம்முயற்சிகள் உதவும்,” என்றார் அவர்.
2026 ஜனவரியிலிருந்து செப்டம்பர் வரை சமூக சமரச மன்றம் 221 வழக்குகளைக் கையாண்டு அவற்றில் 185க்குத் தீர்வுகண்டுள்ளதை அமைச்சர் டோங் சுட்டினார்.
இவ்வாண்டு 12 புதிய சமரச அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர். மொத்தம் 19 அதிகாரிகள் தங்கள் நற்பணிக்காக நான்கு வெவ்வேறு பிரிவுகளில் விருது பெற்றனர்.
நிகழ்ச்சியில் புதிய சமூக சமரச மன்றத்தின் சின்னமும் வெளியிடப்பட்டது.
