மேம்பட்ட பகுதி மின்கடத்திகளைச் சிங்கப்பூரில் உருவாக்குவதற்கான புதிய $123 மில்லியன் கூடம் வியாழக்கிழமை (ஜூன் 27) திறக்கப்பட்டது.
ஒன் நார்த்தில் அமைந்துள்ள கேலியம் நைட்ரைட் வேதிப்பொருளுக்கான தேசிய பகுதி மின்கடத்தி உருமாற்ற, புத்தாக்க நிலையம் 2026ஆம் ஆண்டு நடுவில் தனது வணிக நடவடிக்கைகளைத் தொடங்கவுள்ளது.
எரிபொருள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான டான் சீ லெங் நிலையத் திறப்பு விழாவில் உரையாற்றினார்.
சிங்கப்பூரின் பகுதி மின்கடத்தித் துறை அனைத்துலக அளவில் கூடுதல் போட்டித்தன்மையுடன் திகழக்கூடிய ஆற்றல் இருப்பதாகத் திரு டான் தெரிவித்தார்.
“சிங்கப்பூரின் பகுதி மின்கடத்தித் துறையில் ஏறத்தாழ 35,000 பேர் வேலை செய்கின்றனர். அந்தத் துறை, சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு விழுக்காடு அங்கம் வகிக்கிறது,” என்று அவர் கூறினார்.
இத்தகைய கட்டமைப்புகளுக்கான தேவை கூடி வரும் வேளையில் உலகளாவிய வானொலி அதிர்வலை கேலியம் நைட்ரைட் கருவிகளுக்கான சந்தையின் மதிப்பு, 2028க்குள் 3.4 பில்லியன் வெள்ளியை எட்டும் என்று டாக்டர் டான் தெரிவித்தார்.
அதிக அளவு மின்சக்தியில் செயல்படும் தன்மை கொண்ட கேலியம் நைட்ரைட், வழக்கமான சிலிக்கானைக் காட்டிலும் குறைந்த வெப்பத்தை வெளிப்படுத்தும்.
5ஜி, 6ஜி தொடர்புமுறைகளுக்குக் கூடுதல் செயல்திறன்மிக்க கருவிகளை இந்தத் தன்மைகள் உருவாக்க முடியும். தானியக்க கார்களுக்கும் தொலைதூரக் கண்காணிப்புக்கும் இந்தக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தலாம்.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைய பதற்றமிக்க உலகச் சூழலில் விநியோகச் சங்கிலித் தொடர்கள் சிதறுவதாகக் குறிப்பிட்ட டாக்டர் டான், தற்போது செய்யப்பட்டு வருவது உலகத்தரத் திறன்களை வளர்ப்பதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகக் கூறினார்.