சிங்கப்பூர் சிறைத்துறை ஆணையராக 51 வயது மேத்யூ வீ யிக் கியோங் ஏப்ரல் முதல் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
சிறைத்துறை துணை ஆணையரான (செயல்பாடுகள், மறுவாழ்வு) திரு வீ, உள்துறைக் குழுவில் 27 ஆண்டு கால அனுபவம் கொண்டவர்.
சிறைத்துறையின் தலைவராக உள்ள 53 வயது திருவாட்டி ஷீ யோங் லீ ஏப்ரல் 1 முதல் தேதி அப்பதவியிலிருந்து விலகி, உள்துறை அமைச்சின் துணைச் செயலாளர் (பெருநிறுவனம்) பொறுப்புக்கு மாறுவார் என்று திங்கட்கிழமை (பிப்ரவரி 2) வெளியிட்ட அறிக்கையில் உள்துறை அமைச்சு கூறியது.
சிறைத்துறையை வழிநடத்தும் முதல் பெண் அதிகாரியான திருவாட்டி ஷீ, தமது 30 ஆண்டு கால உள்துறைக் குழு பணியில், சிறைத்துறை துணை ஆணையர், தலைமை அதிகாரி, உள்துறை அமைச்சின் கொள்கை மேம்பாட்டுப் பிரிவின் குடிமைத் தற்காப்பு, மறுவாழ்வு இயக்குநர் உட்பட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
கொவிட்-19 தொற்றுப் பரவலின்போது, சிறைத்துறைத் தலைவராகத் திருமதி ஷீ, கட்டுப்பாட்டு உத்திகளைச் செயல்படுத்த உதவினார். தொழில்நுட்பப் பயன்பாடு மூலம் சிறைத் துறையை மேம்படுத்தினார்.
திரு வீ, முன்னாள் குற்றவாளிகளுக்குத் துறைகளுக்கிடையிலான வழிகாட்டித் திட்டத்தை அறிமுகப்படுத்திய முன்னாள் குற்றவாளிகள் கட்டமைப்பின் மறுவாழ்வு சமூக நடவடிக்கையை மறுஆய்வு செய்யும் பொறுப்பில் இருந்தவர்.
முன்னாள் குற்றவாளிகளுக்குத் திறன் பயிற்சி, தொழில் வளர்ச்சியை வழங்கும் உள்துறை அமைச்சின் கீழ் உள்ள அமைப்பான மஞ்சள் நாடா திட்டத்தின் தலைமை நிர்வாகியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

