சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மனித முடியைப் போன்ற மெல்லிய உணர் இழைகளை நேரடியாக ஆடைகளில் நெய்து, அணிபவரின் இதயம், நுரையீரல் செயல்பாடுகளைக் மின்கம்பிகளின்றி தொடர்ந்து கண்காணிக்கும் புதிய முறையை உருவாக்கியுள்ளனர்.
இதன்மூலம், நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகும் அவர்களின் உடல்நலத்தை நீண்டகாலத்திற்கு மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
அன்றாட ஆடைகளில் இதயத்துடிப்பு மானியின் (மானிடர்) திறன்களை இணைப்பதன் வாயிலாக இது சாத்தியமாகிறது என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
‘முழு இழைக் கம்பியில்லா ஒலிகேட்பு அமைப்பு’ என்ற பொருள்படப் பெயரிடப்பட்டுள்ள இப்புதிய தொழில்நுட்பம், இழை நுண்பேசிகளையும் நெகிழ்வான இழை வடிவ மின்னணுக் கருவிகளையும் ஒருங்கிணைத்து உடலுக்குள் எழும் ஒலிகளைக் கேட்டு, சமிக்ஞைகளாக மாற்றி அச்செயல்முறையைக் கம்பியில்லாமல் அனுப்புகிறது.
திறன் கடிகாரங்கள், திறன் மோதிரங்கள் போன்ற வழக்கமாக அணியக்கூடிய சாதனங்களால் முக்கிய உடல் அறிகுறிகளை மட்டுமே கண்காணிக்க முடியும்.
ஆனால், இதயம், நுரையீரலிலிருந்து வரும் ஒலிகளை அவற்றால் பதிவுசெய்ய இயலாது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ரத்த ஓட்ட மாற்றங்கள், நுரையீரலில் நீர் சேருதல் போன்ற நோயாளியின் உடல்நலம் குறித்த மிக முக்கிய, துல்லியத் தகவல்களை இவ்வொலிகள் மருத்துவர்களுக்கு வழங்குகின்றன.
மனித முடியின் அகலத்தைப் போன்று வெறும் 0.15 மி.மீட்டர் அளவே கொண்ட இந்த இழை நுண்பேசி, நேரடித் தொடர்பு மூலம் நுண்ணிய அதிர்வுகளை உணர்கிறது. இதனால், வெளிப்புற இரைச்சலால் ஏற்படும் இடையூறுகளைக் குறைத்து உடலுள் எழும் ஒலிகளைத் துல்லியமாகப் பதிவுசெய்ய முடிகிறது.
நுண்ணிய மின்னணுக் கூறுகளைக் கொண்ட நெகிழ்வான இழைக் கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள இந்நுண்பேசிகள், ஒலிகளைப் பெருக்கி மின்னிலக்கமாக்கிப் புளூடூத் வழியாகக் கைப்பேசி அல்லது கணினிக்கு அனுப்புகின்றன. நுண்பேசிகளையும் இழைக் கணினியையும் ஒன்றாக ஆடையில் தைக்க முடியும். சிறிய நாணய மின்கலன் உதவியுடன் இதன் மாதிரி ஆடை ஏறத்தாழ 40 மணி நேரம்வரை இயங்கக்கூடியது.
அந்த ஆடைகளை வழக்கமான துணி துவைக்கும் இயந்திரங்களில் போட்டு சுத்தம் செய்யலாம். சிங்கப்பூர் தேசிய இதய நிலையத்துடன் ஒருங்கிணைந்து ஆடைகள் 10 இதய செயலிழப்பு நோயாளிகளிடம் சோதிக்கப்பட்டன.
மருத்துவர்கள் நோயாளிகளை சோதிக்கப் பயன்படுத்தும் ‘ஸ்டதஸ்கோப்’ கருவியைப் போல உடலின் உள்ளே நுண்ணிய ஓசைகளைக் கேட்டறியும் விதமாக ஆடை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
