புதிய தனியார் வீடுகளின் விற்பனை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சரிந்தது.
எக்சகியூட்டிவ் கொண்டோமினியங்களைச் சேர்க்காமல் 203 புதிய வீடுகளைச் சொத்து மேம்பாட்டாளர்கள் விற்றனர்.
கடந்த நவம்பர் மாதம் புதிய வீடுகளின் விற்பனை பெரிய அளவில் அதிகரித்திருந்தது.
டிசம்பர் மாதத்தில் விற்கப்பட்ட புதிய வீடுகளின் எண்ணிக்கை அதைவிட 92 விழுக்காடு குறைவு.
ஆனால், ஆண்டு அடிப்படையில் புதிய வீடுகளின் விற்பனை டிசம்பர் மாதத்தில் 50 விழுக்காடு உயர்ந்தது.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 135 புதிய வீடுகள் விற்கப்பட்டன.
இந்தத் தகவல்களை நகர மறுசீரமைப்பு ஆணையம் புதன்கிழமையன்று (ஜனவரி 15) வெளியிட்டது.
நவம்பர் மாதத்தில் ஆறு புதிய கூட்டுரிமைக் குடியிருப்புகள் விற்பனைக்கு விடப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இதன் காரணமாக டிசம்பர் மாதத்தில் சில புதிய வீடுகள் விற்கப்பட்டன.
மாத அடிப்படையில் புதிய வீடுகளின் விற்பனை 92 விழுக்காடு சரிந்தது.
நவம்பர் மாதத்தில் 2,560 புதிய வீடுகள் விற்கப்பட்டன.
2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு, இதுவே ஆக அதிக புதிய வீடுகள் விற்கப்பட்ட மாதமாகும்.
2024ஆம் ஆண்டில் 6,560 புதிய வீடுகள் விற்கப்பட்டன.
2023ஆம் ஆண்டில் விற்கப்பட்ட புதிய வீடுகளின் எண்ணிக்கையைவிட இது 2.2 விழுக்காடு அதிகம்.
இவ்வாண்டு 10,000க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவற்றில் 7,000லிருந்து 9,000 வரையிலான புதிய வீடுகள் இவ்வாண்டு விற்கப்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 புதிய தனியார் வீடுகள் மட்டுமே விற்பனைக்கு விடப்பட்டன.
நவம்பர் மாதத்தில் 2,871 புதிய தனியார் வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன.
டிசம்பர் மாதம் விற்கப்பட்ட 203 புதிய வீடுகளில் 55 விழுக்காடு வீடுகள் மத்திய வட்டாரத்துக்கு வெளியில் உள்ள பகுதியில் இருப்பவை.
36 விழுக்காடு வீடுகள் மத்திய வட்டாரத்தில் உள்ள எஞ்சிய பகுதிகளில் இருப்பவை.
9 விழுக்காடு வீடுகள் மத்திய வட்டாரத்தின் மையப் பகுதியில் இருப்பவை.