மேரிமவுண்ட், கேல்டிகாட் எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகே புதிய வீடுகள்

2 mins read
701c1665-73ed-493d-a623-d5574bdd3156
மேரிமவுண்ட் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகே புதிய வீடுகள் கட்ட அடையாளம் காணப்பட்டுள்ள பகுதி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் முழுவதும் உள்ள பல பெருவிரைவு ரயில் (எம்ஆர்டி) நிலையங்களுக்கு அருகே உள்ள நிலங்களில் புதிய வீடுகள் கட்டப்படவுள்ளன.

மேரிமவுண்ட், கேல்டிகாட், காலாங் உள்ளிட்ட எம்ஆர்டி நிலையங்களிலிருந்து நடந்துபோகக்கூடிய தூரத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படவுள்ளன. அப்பர் சாங்கி, எக்ஸ்போ, ஒன்-நார்த், உட்லண்ட்ஸ் சவுத் எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகில் உள்ள நிலங்களையும் வீடு கட்ட அதிகாரிகள் தயார்படுத்திவருகின்றனர்.

நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் 2019 பெருந்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தங்களின்படி சம்பந்தப்பட்ட எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகே வீடு கட்ட நிலங்கள் தயார்செய்யப்பட்டுவருகின்றன. அந்தத் திருத்தங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 24, மே ஏழாம் தேதிகளில் வெளியிடப்பட்டன.

நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டம், அடுத்த 10லிருந்து 15 ஆண்டுகளுக்கு சிங்கப்பூரின் மேம்பாட்டுத் திட்டங்களை விவரிக்கும் அதிகாரத்துவ ஆவணமாகும்.

புதிய வீடுகளைக் கட்ட அடையாளம் காணப்பட்டுள்ள நிலங்களில் மூன்று, அப்பர் தாம்சன் ரோட்டில் இருக்கின்றன. அவை மேரிமவுண்ட் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகே இருக்கின்றன.

அந்த மூன்று நிலங்களில் ஒன்றின் பரப்பளவு கிட்டத்தட்ட 35,000 சதுர மீட்டர். அது, ஐந்துக்கும் மேற்பட்ட காற்பந்துத் திடல்களின் பரப்பளவுக்கு சமமாகும்.

அந்த நிலத்தில் முன்னதாக லேக்வியூ கடைத்தொகுதி இருந்தது. அந்த கடைத்தொகுதியை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) 1970களின் தொடக்கத்தில் கட்டி முடித்தது. அங்கு பிரபலமான உணவங்காடி ஒன்று இருந்தது.

1999ஆம் ஆண்டிறுதிக்குள் அவ்விடத்தைக் காலி செய்யுமாறு அந்த உணவங்காடியில் இருந்த 168 உணவுக் கடைகளையும் 134 வாடகைதாரர்களையும் வீவக கேட்டுக்கொண்டது. வீடு கட்டுவதற்காக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக 1997ஆம் அண்டு டிசம்பர் மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

எனினும், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக லேக்வியூ கடைத்தொகுதி இருந்த நிலத்தில் எந்த கட்டடங்களும் கட்டப்படவில்லை.

2000களின் தொடக்கத்தில் லேக்வியூ கடைத்தொகுதி இடிக்கப்பட்டது.

புதிய வீடு கட்ட அடையாளம் காணப்பட்டுள்ள இன்னொரு பகுதி,‌ ‌ஷுன்ஃபு கார்டன்ஸ் வீவக குடியிருப்பு வட்டாரத்துக்கு அருகே உள்ளது. கிட்டத்தட்ட 13,500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட அந்த நிலத்துக்கும் ‌‌ஷுன்ஃபு கார்டன்சுக்கும் இடையே ஒரு கால்வாய் உள்ளது.

வீடு கட்ட அடையாளம் காணப்பட்டுள்ள மற்றோர் இடம், தோ பாயோவில் உள்ளது. அந்நிலம், கேல்டிகாட் எம்ஆர்டி நிலையத்துக்கு மிக அருகில் இருக்கிறது.

அந்த நிலத்தின் பரப்பளவு கிட்டத்தட்ட 78,500 சதுர மீட்டர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வீவககட்டுமானம்