மூன்று ஆண்டுகளில் புதிய வீடுகள்; ஜூன் மாத பிடிஓ விற்பனைத் திட்டம்

மூன்று ஆண்டுகளில் புதிய வீடுகள்; ஜூன் மாத பிடிஓ விற்பனைத் திட்டம்

2 mins read
fb73f008-107a-4fa4-aff0-ae931eebb874
புதிய செம்பவாங் நார்த் வட்டாரத்தில் அமையவுள்ள ‘செம்பவாங் போர்டிகோ’ திட்டம் மிகக் குறைந்த காத்திருப்புக் காலத்தைக் கொண்டுள்ளது. - படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

ஜூன் மாத வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தேவைக்கு ஏற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகள் விற்பனைத் திட்டத்தின்கீழ், ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் மட்டுமே காத்திருக்க வேண்டிய 2,520 புதிய அடுக்குமாடி வீடுகள் விற்பனைக்கு வரவுள்ளன.

செம்பவாங், அங் மோ கியோ ஆகிய வட்டாரங்களில் அமையவுள்ள மூன்று வீட்டுத் திட்டங்களின்கீழ் இவ்வீடுகள் கட்டப்படவுள்ளன. ஜூன் மாதத் திட்டத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஒட்டுமொத்த 6,900 வீடுகளில் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமான வீடுகள் இத்தகைய குறுகிய காலக் காத்திருப்புத் திட்டத்தின்கீழ் அமையவுள்ளன என வீவக ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 7) தெரிவித்தது.

வழக்கமாக அடுக்குமாடி வீடுகள் கட்டி முடிக்கப்படுவதற்கான காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் பொருட்டு, இதர அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து முன்கூட்டியே திட்டமிட்டு, கட்டுமானப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக வீவக கூறியுள்ளது.

இதனால், பொதுமக்கள் வீடுகளைப் பதிவு செய்வதற்கு முன்பே அங்கு கட்டுமானப் பணிகள் கணிசமான அளவு தொடங்கியிருக்கும். இதன்படி, புதிய செம்பவாங் நார்த் வட்டாரத்தில் அமையவுள்ள ‘செம்பவாங் போர்டிகோ’ திட்டம் மிகக் குறைந்த காத்திருப்புக் காலத்தைக் கொண்டுள்ளது.

அங்கு வீடுகளைப் பதிவு செய்வோர் இரண்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் மட்டுமே காத்திருக்க வேண்டும். இதற்கு அருகிலேயே அமையவுள்ள ‘செம்பவாங் புரூக்’ திட்டத்திற்கான காத்திருப்புக் காலம் இரண்டு ஆண்டுகள் ஒன்பது மாதங்களாகும்.

இந்த இரு திட்டங்களிலும் வாடகை வீடுகளும் ஒருங்கிணைத்துக் கட்டப்படவுள்ளன. இங்கிருந்து எம்ஆர்டி நிலையம் சற்றுத் தொலைவில் உள்ளதால், குடியிருப்பாளர்கள் குடியேறிய ஆறு மாதங்களுக்குள் உணவகம், பாலர் பள்ளி, மளிகைக் கடை மற்றும் பேருந்து வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் முன்கூட்டியே கிடைக்கப் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதே வேளையில், அங் மோ கியோ அவென்யூ 2ல் அமையவுள்ள ‘கெபூன் பாரு ரிட்ஜ்’ திட்டத்தின்கீழ் 485 வீடுகள் கட்டப்படவுள்ளன. இதற்கான காத்திருப்புக் காலம் மூன்று ஆண்டுகள் ஒரு மாதமாகும். இவற்றுடன் சேர்த்து ஜூன் மாத விற்பனைத் திட்டத்தில் பீஷான், புக்கிட் மேரா மற்றும் உட்லண்ட்ஸ் ஆகிய இடங்களிலும் புதிய வீடுகள் விற்பனைக்கு வரவுள்ளன.

குறிப்புச் சொற்கள்
பிடிஓவீவகவிற்பனை