தளவாடத் துறையில் திறன் வளர்க்கப் புதிய மையம் திறப்பு

தளவாடத் துறையில் திறன் வளர்க்கப் புதிய மையம் திறப்பு

2 mins read
4e4e74a4-3c9b-4304-b5f0-b038e5f58172
மையத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்த மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் இயந்திரங்களைப் பார்வையிடுகிறார். - படம்: சாவ்பாவ்

தொழிநுட்பக் கல்விக்கழக மாணவர்களைத் தளவாடத் துறையின் மின்னிலக்க மாற்றங்களுக்குத் தயார் செய்யும் வகையில் தனிச்சிறப்புடன் கட்டப்பட்ட புதிய பயிற்சி மையம் அறிமுகம் கண்டுள்ளது.

தளவாடத் துறையில் மாறிவரும் தேவைகளுக்கேற்ப மாணவர்களைத் தயார்படுத்த இந்த மையம் வழியமைக்கும்.

தொழில்துறையின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள ‘லாஜிஸ்டிக்ஸ் டெக்னாலஜி ஹப்’ எனும் இந்த மையம், நவீன தளவாடச் செயல்பாடுகளில் உள்ள மின்னிலக்க, தானியங்கித் தீர்வுகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும்.

நடைமுறைச் செயல்பாட்டுச் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் இத்துறையின் மின்னிலக்க மாற்றத்திற்கு ஏற்ப, தொழில்துறை தரத்திலான தொழில்நுட்பங்களுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (பிப்ரவரி 2) ‘ஐடிஇ காலேஜ் ஈஸ்ட்’ வளாகத்தில் வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் மையத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.

சிங்கப்பூரின் உயர்கல்வி நிறுவனங்களில் தளவாடப் பயிற்சிக்காக முதன்முறையாகப் பயன்படுத்தப்படும் கூட்டு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட ‘தானியங்கிச் சேமிப்பு, மீட்பு அமைப்பு’ இம்மையத்தில் உள்ளது.

இது மாணவர்களுக்குக் கிடங்குத் தானியங்கிப் பகுப்பாய்வுகளில் நேரடிச் செய்முறை அனுபவத்தை வழங்கும்.

விநியோகத் தொடர் நிர்வாகத்தில் ‘உயர் நைடெக்’ பயிலும் தொழில்நுட்பக் கல்விக்கழக மாணவர்கள் கிட்டத்தட்ட 600 பேரின் பயிற்சிக்கு இந்த மையம் ஒவ்வோர் ஆண்டும் ஆதரவு வழங்கும்.

மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட விநியோகத் தொடர் நிர்வாகத்தில் வேலை-கல்வி பட்டயப் படிப்பு மேற்கொள்ளும் பயிற்சியாளர்கள் 150 பேருக்கு இந்த மையம் ஏதுவாக அமையும்.

மையத்திற்குக் கூடுதலாக ஒரு குளிரூட்டப்பட்ட கொள்கலம் அமைக்கப்பட்டுள்ளது.

உணவு, மருந்துகள் போன்ற வெப்பநிலைக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய பொருள்களைச் சேமித்தல், கொண்டுசெல்லுதல் போன்ற, தட்பவெப்ப நிலையால் பாதிக்கப்படக்கூடிய பொருள்களின் தளவாடத்தில் மாணவர்களுக்கு நேரடிச் செய்முறை அனுபவத்தை இது வழங்குகிறது.

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் ஏற்கெனவே உள்ள தளவாடப் பயிற்சி மையம் அறிவார்ந்த கிடங்குச் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே இப்புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மையத்தின் திறப்பு நிகழ்ச்சியில் மூன்று நிறுவனங்களுடன் மூன்றாண்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொழில்நுட்பக் கல்விக்கழகம், மற்றொரு நிறுவனத்துடன் அதன் கூட்டாண்மையைப் புதுப்பித்துக்கொண்டது.

இக்கூட்டு முயற்சிகள் தளவாடத் துறையில் திறன்கள், தொழில்முறை வளர்ச்சியை வலுப்படுத்துவதோடு, மாணவர்களுக்கு மதிப்புமிக்க தொழில்துறை அனுபவத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்