வரும் 2028ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதிமுதல், 200க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் குறைந்தது ஒரு தகுதியான சான்றளிக்கப்பட்ட மனிதவள நிபுணரைக் கொண்டிருக்கவேண்டும்.
வேலையிட மாற்றங்களை நிறுவனங்களும் ஊழியர்களும் திறம்பட எதிர்கொள்ளவும் மனிதவளத் தரத்தை உயர்த்தவும் மேற்கொள்ளப்படும் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாக அந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மனிதவள ஆற்றல் மேம்பாட்டுக்கான முத்தரப்புப் பணிக்குழுவின் பரிந்துரைகளில் இருந்து உருவான தொடர் திட்டங்களில் அந்த நடவடிக்கையும் ஒன்று. அதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
“மனிதவளத் தொழில்முறை நிபுணர்கள் வேலையிட உத்தி, திறன்கள், நிறுவன உருமாற்றம் ஆகியவை தொடர்பான முடிவுகளை அதிகளவில் எடுத்துவரும் வேளையில், இந்தச் சான்றிதழ் தேவை மனிதவள நடைமுறைகளில் மேலும் சீரான தன்மையையும் தரத்தையும் உருவாக்க உதவும்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் மனிதவளத் தொழில்முறை நிபுணர்கள் கழகத்தின் (ஐஎச்ஆர்பி) தலைமை நிர்வாகி அஸ்லம் சர்தார் கூறினார்.
ஒரு பொதுவான நிபுணத்துவத் தொடக்கநிலை, ஊழியரணி சார்ந்த முடிவுகளை எடுப்பதில் முதலாளிகளுக்குக் கூடுதல் நம்பிக்கையை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
மனிதவள அமைச்சு, தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவை இணைந்து தலைமைதாங்கும் மனிதவள ஆற்றல் மேம்பாட்டுக்கான முத்தரப்புப் பணிக்குழு, ‘ஐஎச்ஆர்பி’யின் ‘பீப்பள் பிஹைண்ட் பீப்பள்’ (People Behind People) கருத்தரங்கில் வியாழக்கிழமை (செப்டம்பர் 24) அதன் அறிக்கையை வெளியிட்டது.
அக்கருத்தரங்கின் வரவேற்புரையில் பேசிய திரு சர்தார், 2020 டிசம்பரில் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளிலேயே அதுவே மிகப்பெரியது என்று கூறினார்.
“ஒரு நல்ல வேலை என்பது இன்று அது வழங்கும் பொறுப்பு அல்லது சம்பளத்தால் மட்டும் வரையறுக்கப்படுவதில்லை; மாறாக, காலப்போக்கில் அது ஊழியர்களுக்கு உருவாக்கும் வாய்ப்புகளாலும் வரையறுக்கப்படுகிறது,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
ஊழியர்கள் நியாயமான நடத்தை, வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு, தங்கள் வாழ்க்கையில் மற்ற முன்னுரிமைகளைச் சேர்த்துகொள்வதற்கான நீக்குப்போக்கு, நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைத்தொழில் ஆகியவற்றை அதிகளவில் எதிர்பார்க்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை கூறியது.
மேலும், “வாய்ப்பு என்பது தற்செயலாக அமைவதல்ல, அது திட்டமிட்டு உருவாக்கப்படுவது,” என்றும் அதில் குறிப்பிடப்பட்டது.
‘சிங்கப்பூர் ஆப்பர்ச்சூனிட்டி இன்டெக்ஸ்’ (Singapore Opportunity Index) தரவரிசையில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள், வேலைகளை எவ்வாறு வடிவமைக்கின்றன, ஊழியர்களை எவ்வாறு மேம்படுத்துகின்றன, தலைவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதில் தெளிவான, திட்டமிட்ட முடிவுகளை எடுப்பதன் மூலமே தனித்து நிற்கின்றன என்றும் அறிக்கை கூறியது.
