புதிய எம்ப்ளாய்மென்ட் பாஸ் ஊழியர்களை உள்ளூர்க் கலாசாரத்துடன் ஒருங்கிணைக்க முயற்சி

புதிய எம்ப்ளாய்மென்ட் பாஸ் ஊழியர்களை உள்ளூர்க் கலாசாரத்துடன் ஒருங்கிணைக்க முயற்சி

2 mins read
ஐந்து புதிய முயற்சிகளை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார் மனிதவளத் துணையமைச்சர் தினே‌ஷ்
05874df7-80d1-4741-906e-b0b28a009450
வெளிநாட்டிலிருந்து பணியாற்ற வரும் ஊழியர்களைச் சிங்கப்பூரர்கள், உள்ளூர்க் கலாசாரத்துடன் ஒருங்கிணைக்கும் தீர்வுகளை வகுக்க புதிய முன்னெடுப்புகள் அறிமுகம் கண்டுள்ளன. - படம்: த. கவி

புதிதாக எம்ப்ளாய்மென்ட் பாஸ் பெறுவோர்க்கு சிங்கப்பூர் நடைமுறைகள், கலாசாரம் குறித்த புரிதலை ஏற்படுத்தும் திட்டம் அறிமுகம் காணவுள்ளது.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு 2026 இரண்டாம் காலாண்டில் அறிமுகம் செய்யும் இந்த முன்னோடித் திட்டம், எம்ப்ளாய்மென்ட் பாஸ் வைத்திருக்கும் அனைவர்க்கும் கட்டங்கட்டமாக விரிவாக்கப்படும்.

வெளிநாட்டிலிருந்து இங்கு பணிபுரிய வரும் எம்ப்ளாய்மென்ட் பாஸ் ஊழியர்களை சிங்கப்பூரர்களுடனும் உள்ளூர்க் கலாசாரத்துடனும் ஒருங்கிணைக்கும் தீர்வுகளை வகுக்க வெளிநாட்டு நிபுணர்கள் ஒருங்கிணைப்புச் செயற்கூட்டணி அமைக்கப்பட்டது.

“வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து பணிபுரியும் நிபுணர்களைப் பணியிடத்தில் ஒருங்கிணைக்க ஏதுவான தீர்வுகளை உருவாக்க விரிவான ஈடுபாடுகளை இக்கூட்டணி நடத்தியது,” என்றார் மனிதவளத் துணையமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ்.

“புதிதாக எம்ப்ளாய்மென்ட் பாஸ் பெறுவோர்க்கு சிங்கப்பூர் நடைமுறைகளைப் புரிந்துகொள்ள உதவுதல், நிறுவனங்கள் உள்ளடக்கிய பணியிட நடைமுறைகளைப் பின்பற்றுவதை ஆதரித்தல் என இரு முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு புதிய முயற்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன,” என்று அவர் விளக்கினார்.

பிற முயற்சிகள்

அவர் இணைந்து தலைமை தாங்கும் இக்கூட்டணியின் ஆலோசனையை அடுத்து, இந்த ஒருங்கிணைப்புக்கான ஐந்து புதிய முயற்சிகள் அறிமுகம் கண்டுள்ளன.

இதில், சிங்கப்பூர்த் தொழில் சம்மேளனத்தின் வர்த்தகக் கழகம், கொள்கை ஆய்வுக் கழகத்துடன் இணைந்து உள்ளூர், வெளிநாட்டு ஊழியர் ஒருங்கிணைப்புப் பயிற்சியையும் அறிமுகப்படுத்தவுள்ளது.

நிறுவன மக்கள் நிர்வாக மேலாளர்கள், மனிதவள ஊழியர்களுக்கான இப்புதிய பயிற்சித் திட்டம் 2026 இரண்டாம் காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும்.

புதிதாக எம்ப்ளாய்மென்ட் பாஸ் பெறுவோர்க்கான அறிமுக நிகழ்ச்சியை வர்த்தகச் சங்கங்கள், சபைகளுடன் இணைந்து கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு நடத்தும். 2026 மூன்றாம் காலாண்டில் ஐந்து வர்த்தகச் சங்கங்கள், சபைகளுடன் தொடங்கும் இத்திட்டம், பின்னர் அனைத்துச் சபைகளுக்கும் விரிவடையும்.

2026 இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூர்த் தேசிய முதலாளிகள் சம்மேளனம், வேலையிட ஒருங்கிணைப்பு வழிகாட்டி நூலை அறிமுகம் செய்யும். இதனை உரிய முறையில் பயன்படுத்த மனிதவள ஊழியர்களுக்கு பயிலரங்குகளும் நடத்தப்படும்.

வெளிநாட்டு நிபுணர்களுக்கு ஒருங்கிணைப்பு வளங்களுக்கான இணையத் தகவல்தளத்தையும் சம்மேளனம் தனது இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்