மலாய் - முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்புகளை வலுப்படுத்தும் நோக்கத்தைப் பற்றிக் கலந்துரையாட மலாய் - முஸ்லிம், இந்திய சமூக அமைப்புகள், ‘எம்3’ அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தலைவர்கள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) ஒன்றுகூடினர்.
‘எம்3’ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற அந்தக் கலந்துரையாடலில் உள்துறைக்கான மூத்த துணை அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் கலந்துகொண்டார்.
இவ்வாண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில், ‘எம்3’ கூட்டுப் பங்காளித்துவம் ‘எம்3 பிளஸ்’ திட்டமாக விரிவாக்கப்படும் என்று திரு ஃபைஷால் அறிவித்ததைத் தொடர்ந்து, அமைப்புகள் காத்திப் ‘ஹோம்டீம் என்எஸ்’ வளாகத்தில் முதல்முறையாக ஒன்றிணைந்தனர்.
“‘எம்3 பிளஸ்’ திட்டத்தை எப்படி உருவாக்கலாம், உருவாக்கவேண்டும் என்பது குறித்து மேலும் ஆழமான உரையாடல்களுக்கு வழிவகுக்க நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றிப் பேச இது ஒரு தொடக்கமாக அமைகிறது,” என்று தமது உரையில் திரு ஃபைஷால் குறிப்பிட்டார்.
அதிகரிக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்ய மலாய் - முஸ்லிம் சமூகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திரு ஃபைஷால்.
“இது அதிகாரத்தைப் பற்றியது அல்ல. கூட்டாண்மையைப் பற்றியது,” என்றார் அவர்.
பல அமைப்புகள் ஒன்றிணைவதால் அவர்கள் ஒருவருக்கொருவரின் கருத்துகளைக் கேட்டு ஒருங்கிணைப்பை எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பதைக் கண்டறிய இது ஒரு வாய்ப்பாகும் என்று திரு ஃபைஷால் சுட்டிக்காட்டினார்.
“மலாய் - முஸ்லிம் சமூக அமைப்புகள் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் மேலும் இதுபோன்ற பல முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஏற்பாடு செய்வோம்,” என்று அவர் உறுதியளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அந்தக் கலந்துரையாடலில் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் உட்பட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டன.
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் தனது சேவைகளை இந்திய முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் சமூகத்தின் அனைத்து முஸ்லிம்களிடமும் கொண்டுசேர்ப்பதற்கு இது ஒரு சிறந்த தளம் என்றார் அதன் தலைவர் ராஜா முகமது.
“சவாலான சமூக ஊடகச் சூழலையும் பல்வேறு வயதினரின் மாறுபட்ட தேவைகளையும் கையாளும் வகையில் நாங்கள் தயாராகி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

