அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பெற்றோருக்கான 10 வார குழந்தைப்பேறு பகிர்வு விடுப்புத் திட்டம், குடும்பங்களுக்கு மேலும் உகந்த நாடாக சிங்கப்பூரை உருவெடுக்கச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் அடங்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு தம்பதியரை ஊக்குவிப்பதற்காக வெகுமதி வழங்குவதில் கவனம் செலுத்தும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்தப் பகிர்வு விடுப்புத் திட்டம், அத்தகைய திட்டங்களிலிருந்து மாறுபட்டது என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.
திருமணம் செய்துகொள்வது, குழந்தை பெற்றுக்கொள்வது ஆகியவை மிகவும் தனிப்பட்ட முடிவுகள் என்பதைச் சுட்டிய அவர், ஆசைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கும் இலக்குகளை அடைவதற்கும் இடையே மக்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் நடுநிலையை அடையவேண்டும் என்று எடுத்துச்சொன்னார். வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 23) அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
பல இளம் பெற்றோர், குடும்பங்களுக்குக் கவலை தரும் அம்சங்கள் முன்னேறும் சிங்கப்பூர்த் திட்டத்தின் அறிக்கையில் தெரிய வந்ததாக திரு வோங் கூறினார். பாலர் பள்ளி, கல்வி, பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும்போது அவர்களுடன் கூடுதல் நேரம் செலவிடுவது போன்றவற்றின் தொடர்பில் அவர்களுக்கு அக்கறைகள் இருப்பது தெரிய வந்தது.
“குழந்தை பெற ஊக்குவிப்பதற்காக மட்டும் வளங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக பொதுவாக குடும்பங்களுக்கு மேலும் உகந்த சூழலை உருவாக்க வளங்களை உபயோகிக்கலாம்,” என்றார் அவர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) திரு வோங் தமது முதல் தேசிய தினப் பேரணி உரையை ஆற்றினார். அதில் புதிய இலக்குகளை அடைய சட்டங்கள், அணுகுமுறை ஆகியவற்றை மாற்றுவதற்கு அவர் குரல் கொடுத்தார். அவரவர் தங்களுக்கு ஏற்ற வகையில் செழிப்படைந்து தேர்ச்சிபெற வகைசெய்வது போன்ற இலக்குகளைக் கருத்தில்கொண்டு திரு வோங் அவ்வாறு சொன்னார்.
அந்த வகையில், இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளில் ஒன்று, பெற்றோருக்கான 10 வாரப் பகிர்வு விடுப்புத் திட்டம். அந்த விடுப்பில் இருக்கும் பெற்றோர் இழக்கும் சம்பளத் தொகையை அரசாங்கம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன்கீழ் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் புதிய பெற்றோருக்கு கூடுதலாக 10 வாரங்களுக்குப் பகிர்வு விடுப்பு இருக்கும்.