வெளிநாட்டு ஊழியர்களின் மனநலனை மேம்படுத்தும் நோக்கில் அமையும் புதுப்பிக்கப்பட்ட ‘டான்’ (DAWN) திட்டத்தின் இரு புதிய முன்னெடுப்புகளைக் கலாசார, சமூக இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசுதாஸ் அறிவித்துள்ளார்.
‘ஹெல்த் சர்வ்’ அமைப்பின் ஏற்பாட்டில், அடுத்த ஈராண்டுகளில் வெளிநாட்டு ஊழியர்கள் 20,000 பேரைச் சென்றடையும் 20 நோய்த்தடுப்பு, நலன் தொடர்பான சாலைக் கண்காட்சிகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தன்னார்வக் குழுக்களைக் கொண்ட வெளிநாட்டு ஊழியர் நிலையத் தூதுவர் உள்ளிட்ட பங்காளி அமைப்புகளுக்கு, ‘சகாக்களுக்கான மனநல ஆதரவுத் தலைவர்கள் திட்டம்’ (Peer Support Leaders) விரிவடையும் என்றும் திரு தினேஷ் சொன்னார்.
அதன்கீழ், கனிவும் நல்ல தொடர்புத் திறனும் கொண்ட ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும் என்றார் அவர். பயிற்றுவிப்பாளர்களை உருவாக்கி, அதன் மூலம் சக ஊழியர்களுக்கு இடையிலான ஆதரவுக் கட்டமைப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
மனிதவள அமைச்சின் உத்தரவாதம், பராமரிப்பு, ஈடுபாடுகளுக்கான ‘ஏஸ்’ குழு, ‘ஹெல்த் சர்வ்’ அமைப்புகள் இணைந்து நடத்திய வெளிநாட்டு ஊழியர்களுக்கான அனைத்துலக மனநல விழாவில் திரு தினேஷ் இதனை அறிவித்தார். அவை மேற்கொள்ளும் ‘டான் திட்டம்’ குறித்தும் அதன் மூன்று புதிய நோக்கங்கள் குறித்தும் அவர் பேசினார்.
கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைபெறும் இந்நிகழ்ச்சி, இம்முறை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 05) ‘டெருசான் பொழுதுபோக்கு மையத்தில்’ (Terusan Recreation Centre) நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற துணை அமைச்சர் தினேஷ், “வீடு, குடும்பத்தினரைவிட்டு வெகுதூரம் வந்து பணியாற்றும்போது பல்வேறு கவலைகள் எழுவது இயல்பு. ஆனாலும், வேலை பறிபோகும் எனும் அச்சம், மொழித்தடை, வளங்கள் குறித்து அறியாமை ஆகிய காரணங்களினால் உதவிகளை நாடுவதில்லை,” என்றார்.
மேலும், “ஊழியர்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து வல்லுநர்களைவிட பயிற்சி பெற்ற சகாக்களிடம் பகிர விரும்புவது அண்மையில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுவும் புரிந்துகொள்ளக்கூடியதே. இதனை மனத்தில் வைத்துப் புதிய முன்னெடுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்றார் திரு தினேஷ்.
தொடர்புடைய செய்திகள்
ஊழியர்கள், தேவைப்படும்போது தயக்கமின்றி உதவிகளை நாட வேண்டும் என்றும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் மனநலனில் அக்கறை செலுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார்.
புதிதாக வரும் ஊழியர்கள் சூழ்நிலைக்குப் பழகும் வரை ஆதரவளிக்கும் ‘சகாக்கள் முறையை’ நடைமுறைப்படுத்தியுள்ள ‘பியூர்டெக்’ நிறுவனத்தின் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அதிகாரி ஷேக் முகம்மது சதத், 41, “புதிய ஊழியர்களுக்கு வேலையிடச் சூழல், பணி, மொழி, உணவு என அனைத்தும் புதிதாக இருக்கும். அதனால், அவர்கள் நலனில் அக்கறை கொண்டு கவனிக்கிறோம். அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் சகாக்களிடம் பகிர ஊக்குவிக்கிறோம். சகாக்களிடமிருந்து அவற்றை அறிந்து, களைய முற்படுகிறோம்,” என்றார்.
“கடந்த 19 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணியாற்றுகிறேன். நான் வந்தபோது திறன்பேசி வசதிகூட இல்லாமல் சிரமப்பட்டேன். இப்போது அந்த வசதி இருந்தாலும், பலர் வீடுகளை நினைத்தோ வேலைகுறித்த கவலை அல்லது பிற பிரச்சினைகளாலோ மன அழுத்தத்துக்கு ஆளாகக்கூடும். அந்நிலையைத் தவிர்க்க, அவ்வப்போது அனைவரையும் இணைத்து விளையாட்டுகளில் ஈடுபடுகிறோம். வெளியில் சென்று விடுமுறையைக் கழிக்கிறோம். இருப்பினும், கூடுதலான, சரியான உதவிகளை வழங்க திட்டங்கள் ஏற்படுத்துவது மிகவும் சிறப்பானது, என்றார் ராசாக்கண்ணு ராசமோகன், 41.
கடந்த 2023ஆம் ஆண்டு இந்தியாவில் தமது தந்தை தவறியபோது, இங்குச் செய்வதறியாது தவித்ததாகக் குறிப்பிட்ட ஊழியர் தங்கம் கார்த்திக், 34, சகாக்களுக்கான மனநல ஆதரவுத் திட்டத்தில் பங்காற்றிய சக ஊழியர் தமக்கு உதவியதை நினைவுகூர்ந்தார்.
மீண்டும் சிங்கப்பூர் வந்தபிறகு, தனக்கு உதவி கிட்டியதைப்போலப் பிறருக்குத் தான் உதவியாக அமைய வேண்டும் என அவர் உறுதிபூண்டார். எனவே, அத்திட்டத்தில் இணைந்து, பயிற்சி பெற்று தற்போது தொண்டாற்றி வருகிறார்.
“முன் அனுபவம் இல்லாமல் பணிக்குச் சேருபவர்கள், ஆங்கில மொழி அறியாமல் வருந்துபவர்கள், வீட்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து கவலை கொள்பவர்கள் என அனைவருக்கும் ஆதரவாகச் செயல்படுகிறேன். இயன்ற அளவு பேசுகிறேன். அண்மையில், முதலுதவிக்கான பயிற்சியில் சேரப் பலரை ஊக்குவித்தேன். எனக்குக் கிடைத்த உதவியைத் திரும்பச் செலுத்துவதில் மகிழ்ச்சி,” என்றார் அவர்.
வெளிநாட்டு ஊழியர்கள் ஏறத்தாழ 1,000 பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், விளையாட்டுகள், விழிப்புணர்வுக் கண்காட்சிகள் போன்றவை இடம்பெற்றன.