கொவிட்-19 கிருமித்தொற்று பரவலுக்குப் பிறகு, உயிரை மாய்த்துக்கொள்வதைத் தடுக்கும் நிலையமான சமாரிட்டன்ஸ் ஆஃப் சிங்கப்பூர் (Samaritans of Singapore), அதன் செயல்பாட்டுக் கட்டமைப்பை மாற்றியது.
கூடுதல் பயிற்சிகள், தொடர்பு நடவடிக்கைகள், விரிவுபடுத்தப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் கூடுதலானோருக்கு உதவிக்கரம் நீட்ட அந்நிலையம் அவ்வாறு செய்தது.
தனது புதிய அணுகுமுறையால் எழக்கூடிய விதிமுறைக் கட்டமைப்பு (governance), நீடித்த நிலைத்தன்மை தொடர்பான அபாயங்களைக் கையாள சமாரிட்டன்ஸ் ஆஃப் சிங்கப்பூரின் நிர்வாகக் குழு நடவடிக்கை எடுத்தது. இப்போது அந்நிலையம் அதன் சேவைகளை விரிவுபடுத்தியிருக்கிறது.
2022ஆம் ஆண்டில்சிங்கப்பூரின் முதல் 24 மணிநேர நெருக்கடி குறுந்தகவல் சேவை தொடங்கப்பட்டது அத்தகைய சேவைகளில் அடங்கும். அச்சேவை ஆண்டுதோறும் 9,300க்கும் அதிகமானோருக்கு ஆதரவளிக்கிறது.
சமாரிட்டன்ஸ் ஆஃப் சிங்கப்பூர் மேற்கொண்ட நடவடிக்கைகள், நன்கொடைத் துறையில் ஆக்ககரமான தலைமைத்துவம் சிங்கப்பூரில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை எடுத்துக்காட்டுவதாகக் கலாசார, சமூக, இளையர் துறையின் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ புதன்கிழமை (அக்டோபர் 29) கூறினார்.
நன்கொடைத் துறையில் தலைமைத்துவம் அரிது என்றார் அவர். அது சாத்தியமாக நன்கொடை வழங்குபவர்களுடனும் பொதுமக்களுடனும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வலுவான விதிமுறைக் கட்டமைப்பும் வெளிப்படையாக இருக்கும் போக்கும் அவசியம் என்று அவர் விவரித்தார். அவ்வாறே திடடங்கள் பிறர் வாழ்க்கையில் நம்பிக்கை தரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் தாக்கத்தை ஏற்படுத்த சமூகங்களுக்கு ஆற்றல் தரும் என்றும் அவர் சுட்டினார்.
ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் நன்கொடை விதிமுறைக் கட்டமைப்பு மாநாட்டில் (Charity Governance Conference) திரு நியோ பேசினார். இந்நிகழ்ச்சி பார்க்ராயல் கலெக்ஷன் மரினா பே ஹோட்டலில் நடந்தது.
சமாரிட்டன்ஸ் ஆஃப் சிங்கப்பூர் போன்ற அமைப்புகள் தங்களின் தலைமைத்துவத்தையும் விதிமுறைக் கட்டமைப்பையும் மேம்படுத்த திரு நியோ புதிய திட்டங்களை அறிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
நன்கொடை அமைப்புகள் தங்கள் நடைமுறைகளை ஆராய 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் புதிய கட்டமைப்பு வெளியிடப்படும். நன்கொடை அமைப்புகளுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட விதிமுறைக் கட்டமைப்புத் திட்டம், வெளிப்படைத் தன்மை கட்டமைப்பு (Integrated Governance And Transparency Framework for charities) எனும் இந்தக் கட்டமைப்பைக் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கியுள்ளன.
அதோடு, நன்கொடை அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும், ஒரே இடத்தில் பல சேவைகளை வழங்கும் தளம் மற்றும் புதிய தலைமைத்துவப் பயிற்சித் திட்டம் ஆகியவையும் மாநாட்டில் அறிவிக்கப்பட்டன.

