ஜோகூர் பாரு: ஒவ்வொரு வாரமும் சமூக ஊழியர் முகம்மது ஃபரிஸத்துல் அகமது மோட்டார்சைக்கிளில் சிங்கப்பூருக்கு வந்துசெல்கிறார்.
அவர் வேலைக்காக வரவில்லை. மாறாகச் சாலை விபத்துகளில் காயமுறும் மலேசியர்களுக்கு உதவி செய்வதற்காக இங்கு வருகிறார்.
கூடுதல் சம்பளம் கிடைக்கக்கூடிய வேலைகளுக்காக மலேசியர்கள் பலர் சிங்கப்பூருக்கு மோட்டார்சைக்கிள்களில் வருகின்றனர். அதிகமானோர், அவர்களின் காப்புறுதி விவரங்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அல்லது போதிய அளவுக்குக் காப்புறுதி அவர்களிடம் இல்லை. சிலரிடம் காப்புறுதியே இல்லை.
“இது கவலைதரும் போக்கு. கிட்டத்தட்ட அன்றாடம் உதவி கேட்டு ஏராளமான அழைப்புகள் வருகின்றன. ஒவ்வொரு மாதமும் வேலைக்குச் செல்லும்போதோ வீட்டுக்குத் திரும்பும்போதோ குறைந்தது ஒருவர் மாண்டுபோகிறார். விபத்துகளில் சிக்கும்போது, அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் எனத் தெரியவில்லை,” என்றார் ஜோகூரைச் சேர்ந்த 35 வயது முகம்மது. ஜோகூரைத் தளமாகக் கொண்ட அரசாங்கம் சாரா அமைப்பான சிங்கப்பூர் விபத்து உதவி நிலையத்தில் அவர் பணிபுரிகிறார்.
நிதி உதவி, இலவசச் சட்ட உதவி, தாயகத்திற்குத் திருப்பியனுப்பும் சேவை முதலியவற்றுக்கு விண்ணப்பம் செய்வோருக்கு அவர் உதவுகிறார். காப்புறுதியில் அத்தகைய இடைவெளிகள் விரைவில் குறையக்கூடும்.
மலேசியா, சிங்கப்பூரில் வேலை செய்யும் தனது குடிமக்களுக்காகப் புதிய காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிடுகிறது.
சென்ற மாதம் (பிப்ரவரி) 5ஆம் தேதி மலேசியாவின் மனிதவள அமைச்சர் ஆர் ரமணன் அதனை அறிவித்தார். முன்மொழியப்பட்டுள்ள காப்புறுதித் திட்டம், ஏறக்குறைய 400,000 மலேசியர்களுக்குப் பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டின் (2026) இரண்டாம் காலாண்டில் திட்டம் தயாராகிவிடும் என்று நம்பப்படுகிறது. சம்பந்தப்பட்ட சட்டங்களை அனைத்துலகத் தொழிலாளர் தரநிலைகளுக்கு ஏற்ப வரைவது குறித்து அதிகாரிகள் மறுஆய்வு செய்வதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு (2025) சிங்கப்பூருக்குச் சென்றுவந்த மலேசியர்களிடையே 54 மரணங்கள் நிகழ்ந்ததாக ஜோகூரைத் தளமாகக் கொண்ட அரசாங்கம் சாரா அமைப்பொன்று தெரிவித்தது. அதற்கு முந்திய ஆண்டு அந்த எண்ணிக்கை 48ஆக இருந்தது.
புதிய காப்புறுதித் திட்டம் நிம்மதியைத் தரக்கூடும் என்று ஊழியர்கள் பலர் கூறினர்.
36 வயது திரு இஸாட் ரொஸாலி, கேலாங் பாத்தாவிலிருந்து துவாசுக்கு வருகிறார். அவர் மலேசியாவில் காப்புறுதி எடுத்துள்ளபோதும் புதிய திட்டத்தை வரவேற்றார்.
இஸ்கந்தர் புத்ரியிலிருந்து சாங்கிக்கு வரும் 40 வயது திரு நாதன் கிருஷ்ணாவும் ஊழியர்கள் பலருக்கு அவர்களின் காப்புறுதித் திட்டம் குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை என்றார். புதிய திட்டம் அடிப்படைப் பாதுகாப்பையாவது வழங்கும் என்று அவர் சொன்னார்.

