சிங்கப்பூரில் உள்ள கைப்பேசிகள், அமைதிப் பயன்முறையில் (silent mode) வைக்கப்பட்டிருந்தாலும் அல்லது அழைப்பில் இருந்தாலும், மே 10ஆம் தேதி முதல் அனைத்து அறிவிப்பு அமைப்புகளையும் மீறி அவை ஓர் எச்சரிக்கைத் தகவலைப் பெறும்.
‘எஸ்ஜி அலர்ட்’ (SG Alert) எனப்படும் இந்தப் புதிய தேசிய எச்சரிக்கை முறை, ஒரு பாப்-அப் அறிவிப்பு, தனித்துவமான எச்சரிக்கை ஒலி, 10 வினாடி வரை நீடிக்கும் அதிர்வு முறையுடன் வருகிறது.
மே மாதம் முதல், பெரும் தீ விபத்துகள், வேதிப்பொருள் அல்லது பயங்கரவாதச் சம்பவங்கள் போன்ற அவசரநிலைகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்க இது பயன்படுத்தப்படும்.
மே 10ஆம் தேதி அன்று நடைபெறும் முதல் பொதுச் சோதனை நடவடிக்கையில், சிங்டெல் சந்தாதாரர்கள், சிங்டெல் கட்டமைப்பைப் பயன்படுத்தும் கைப்பேசிச் சேவை வழங்குநர்களைக் கொண்டவர்கள் மட்டுமே இந்த எச்சரிக்கையைப் பெறுவார்கள்.
அவர்களில் GOMO, VIVIFI, Zero1, ZYM Mobile ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்களும் அடங்குவர்.
2027ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் மற்ற தொலைத்தொடர்பு சந்தாதாரர்கள் இதில் சேர்க்கப்படுவார்கள். மேலும் ஸ்டார்ஹப் கட்டமைப்பில் உள்ளவர்கள் 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த எச்சரிக்கையைப் பெறுவார்கள்.
தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்க விரைவாகப் பொதுமக்களை எச்சரிப்பதற்காக, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையால் ‘எஸ்ஜி அலர்ட்’ செயல்படுத்தப்படும்.
உள்துறைக் குழு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு, தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், சிங்டெல் ஆகியவற்றுடன் இணைந்து இது தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கைப்பேசி ஒலிபரப்புத் தொழில்நுட்பம்
இந்த அமைப்பு, கைப்பேசித் தரவு தேவையில்லாமலும் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்காமலும் எச்சரிக்கைகளை விடுக்க, கைப்பேசி ஒலிபரப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
இதன் பொருள், தொலைத்தொடர்புக் கட்டமைப்பு நெரிசலால் வேகம் குறையக்கூடிய குறுஞ்செய்திகள் அல்லது இணையத்தைச் சார்ந்திருக்கும் செய்திகளைப் போலல்லாமல், இந்த எச்சரிக்கைகள் சில வினாடிகளுக்குள் பொதுமக்களைச் சென்றடையும்.
அவற்றைத் தீவு முழுவதும் ஒலிபரப்பலாம் அல்லது ஒரு சம்பவம் நடக்கும் குடியிருப்புப் பகுதி போன்ற குறிப்பிட்ட இடங்களில் ஒலிபரப்பலாம்.
கைப்பேசிச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவோ கணக்குப் பதிவு செய்யவோ தேவையில்லை. ஆனால், கைப்பேசிப் பயனர்கள் ஆக அண்மைய இயங்குதளங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
தமிழிலும் தகவல் கிடைக்கும்
இந்த எச்சரிக்கை, இயல்பாக ஆங்கிலத்திலும் பயனரின் விருப்பமான கைப்பேசி மொழி அமைப்பைப் பொறுத்து மாண்டரின், மலாய் அல்லது தமிழிலும் அனுப்பப்படும்.
பழைய கைப்பேசி மாதிரிகளில், இணக்கத்தன்மை சிக்கல்கள் காரணமாக, இந்த எச்சரிக்கை ‘SG Alert’ என்பதற்குப் பதிலாக ‘Presidential alert’ என்ற தலைப்புடன் தோன்றக்கூடும்.
இந்த முறை அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அதைப் பெறுபவர்கள் செய்தியைக் கவனமாகப் படித்து, அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

