விமானப் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் மேம்பாட்டுக்கான புதிய கூட்டு முயற்சி

விமானப் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் மேம்பாட்டுக்கான புதிய கூட்டு முயற்சி

2 mins read
60,000 பேருக்குச் சுகாதார, மனநல ஆதரவை மேம்படுத்துவது இலக்கு
19254e2b-2b06-4d76-a7c1-71ef83e5c2ad
தேசிய வளர்ச்சி, போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங் (இடமிருந்து இரண்டாமவர்), ‘ஒன் ஏவியேஷன்’ நல்வாழ்வு விழாவில் உதவிக் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்ட சாங்கி பொது மருத்துவமனை ஊழியர்களிடம் கலந்துரையாடினார்.   - படம்: சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம்
multi-img1 of 2

சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் சாங்கி பொது மருத்துவமனையும் இணைந்து விமானப் போக்குவரத்துத் துறை ஊழியர்களின் சுகாதார, மனநல ஆதரவை மேம்படுத்தும் நோக்கில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளன.

விமானிகள், விமானச் சிப்பந்திகள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவினர், பொறியாளர்கள், தொழில்நுட்பர்கள், பயணிகள் சேவைப் பிரிவினர், பாதுகாப்பு அதிகாரிகள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 60,000 ஊழியர்கள் இதனால் பலனடைவர்.

இதன் தொடர்பில் ஆணையமும் மருத்துவமனையும் இணைந்து ஏப்ரல் 7 முதல் 10 வரை ‘ஒன் ஏவியேஷன்’ நல்வாழ்வு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளன. சாங்கி விமான நிலைய முனையங்கள் 2, 3 மற்றும் சாங்கி சரக்குவிமானப் போக்குவரத்து நிலையம் ஆகியவற்றில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

சென்ற ஆண்டு (2025) ஜூலையில் ஆணையமும் மருத்துவமனையும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் முக்கிய முன்னெடுப்புகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் அடங்கும்.

உலகச் சுகாதார தினம் 2026ஐயொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கு தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) விமானத்துறை ஊழியர் சங்கங்கள், சிங்கப்பூர் விமானிகள் சங்கம், சாங்கி விமான நிலையக் குழுமம் ஆகியவை ஆதரவு தருகின்றன.

விமானப் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்காக சுகாதார, மனநல நிகழ்ச்சி நடத்தப்படுவது இதுவே முதன்முறை. அவர்கள் தங்கள் சுகாதாரத்தையும் நல்வாழ்வையும் திறம்படக் கையாள்வதற்கான உதவிக்குறிப்புகளையும் வளங்களையும் பெற இது உதவுகிறது.

இந்த விழாவில் மனநலம், ஊட்டச்சத்து மற்றும் உணவியல், சுகாதாரப் பரிசோதனையும் வருமுன் காக்கும் முறையும், உடற்பயிற்சியும் உடல்நலமும், வேலையிடச் சுகாதாரமும் விபத்துகளைத் தடுக்கும் முறையும், ஆரோக்கியமான உறக்கம், புகைத்தலைக் கைவிடுதல் மற்றும் போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுதல் என ஏழு கருப்பொருள்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெறும்.

விமானப் போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் பயனடைவதை உறுதிசெய்யும் விதமாக இந்த நான்கு நாள் விழாவின் நிகழ்ச்சிகள் அமைந்திருக்கும். பொதுமக்கள் இவற்றில் கலந்துகொள்ள இயலாது.

குறிப்புச் சொற்கள்