சிங்கப்பூரில் வாங்கும் சிம் அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து புதிய சட்டம் அமலுக்கு வரவுள்ளது.
இதில் குற்றச்செயல்களுக்கு அந்த சிம் அட்டைகள் பயன்படுத்தப்பட்டால் அதன் உரிமையாளர்களுக்கு மூன்று ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப்படுகிறது.
சட்ட அமலாக்கம், மற்ற விவகாரங்கள் (Law Enforcement and Other Matters Act ) தொடர்பான புதிய சட்டப் பிரிவுகள் புதன்கிழமை (ஜனவரி 1ஆம் தேதி) நடப்புக்கு வரும் என்று உள்துறை அமைச்சு திங்கட்கிழமை (டிசம்பர் 30ஆம் தேதி) தெரிவித்தது.
இதன் தொடர்பில் தங்கள் பெயரில் பதிவாகும் சிம் அட்டைகளை மற்றவருக்குக் கொடுப்பவர்கள் அதை யாரிடம் கொடுக்கிறோம், அவர் எங்கிருக்கிறார் போன்ற விவரங்களை தெரிந்துகொள்ள நியாயமான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் அல்லது சிம் அட்டைகள் வேண்டிப் பெறும் ஒருவர் அதை எதற்காக வேண்டுகிறார் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
புதிய சட்டப் பிரிவுகளின்படி, சிம் அட்டையைப் பெறும் ஒருவர் குற்றச்செயலில் ஈடுபடக்கூடும் அல்லது சிம் அட்டை மூலம் குற்றம் நடக்கலாம் என நம்ப இடமிருந்தால், அவர் குற்றம் புரிந்தவராகக் கருதி தண்டிக்கப்படக்கூடும்.
இதில் குற்றம் புரிவோருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
வெளிநாட்டு மோசடி தொலைபேசி அழைப்புகளையும் குறுந்தகவல்களையும் முடக்க 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அடுத்து குற்றக் கும்பல்கள் உள்ளூர் சிம் அட்டைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவிக்கிறது.
உள்ளூர் கைக்தொலைபேசி எண்கள் வழி நடக்கும் இணைய மோசடி, மற்ற மோசடிகள் போன்றவை 2021ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டுவரை நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதுநாள்வரை உள்ளூர் சிம் அட்டைகளை மற்றவருக்கு தருவோர் மீது தகுந்த காரணமில்லாமல் குற்ற வழக்கு தொடர்வதில் சிரமங்கள் இருந்ததாக அமைச்சு விளககியது.
ஆனால், புதிய சட்டப் பிரிவுகளின்கீழ் மோசடியில் ஈடுபடுவோருடன் இடைத்தரகர்களும் தண்டிக்கப்படக்கூடும்.

