மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக் பார்க்லே அக்டோபர் 31ஆம் தேதியன்று பதவி விலகுகிறார். கடந்த பத்தாண்டுகளாக அவர் அக்குழுமத்துக்குத் தலைமை தாங்கினார்.
அவருக்குப் பதிலாக திரு பென்னட் நியோ, குழுமத்தின் கதலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்பார்.
இத்தகவலை மண்டாய் வனவிலங்குக் குழுமம் திங்கட்கிழமை (ஜூலை 21) வெளியிட்டது.
செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து குழுமத்தின் குழுத் தலைமை நிர்வாகியாக திரு நியோ பதவி வகிப்பார். அக்டோபர் 31 வரை திரு பார்க்லே ஆலோசகராகச் செயல்படுவார்.
திரு பார்க்லேயின் தீர்க்கமான தலைமைத்துவம், பங்களிப்பு ஆகியவற்றுக்காக மண்டாய் வனவிலங்குக் குழுமத் தலைவர் பியுஷ் குப்தா அவரிடம் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
திரு நியோவுக்கு எரிசக்தி, கடல்துறை, தளவாடத்துறை ஆகியவற்றில் 30 ஆண்டுகால அனுபவம் உள்ளது.
ஆகக் கடைசியாக அவர் செம்கார்ப் இண்டஸ்ட்ரியில் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகித்தார்.
மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி, புத்தாக்கம் போன்றவற்றுக்கு திரு நியோவின் அனுபவம் உதவியாக இருக்கும் என்று திரு குப்தா தெரிவித்தார்.