தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆர்ச்சர்ட் நூலகம் புதுப்பிப்பு: தொடங்கவுள்ளது அறிவார்ந்த தேசக் கண்காட்சி

2 mins read
86ce2e37-c293-4de1-afc1-7b2defbc2945
2026ஆம் ஆண்டின் நடுப்பகுதிவரை ஆர்ச்சர்ட் நூலகம் புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்படும் என்று தேசிய நூலக வாரியம் செப்டம்பரில் அறிவித்தது.  - படம்: சாவ்பாவ் 

தேசிய நூலக வாரியத்தின்கீழ் ஆர்ச்சர்ட் நூலக வளாகம் திங்கட்கிழமை (அக்டோபர் 28) முதல் 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதிவரை புதுப்பிப்புப் பணிகளுக்கு அதிகாரபூர்வமாக மூடப்படவுள்ளது. 

வளைந்த புத்தக அலமாரிகளின் வடிவமைப்புக்குப் பெயர்பெற்ற ஆர்ச்சர்ட் நூலகத்தில், புதிய சேவைகள், வருபவர்களுக்குப் புதிய அனுபவங்களை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இந்தப் புதுப்பிப்புப் பணியும் அடங்கும். 

அதுமட்டுமல்லாமல், புதுப்பிப்புப் பணிகளுக்கு இடையே, ‘#ஹார்ட் அண்ட் சோல்: அறிவார்ந்த தேசக் கண்காட்சியுடன் இணைவோம்’ (#Heart&Soul: Connected by Smart Nation Showcase) என்ற கண்காட்சி 2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் துவங்கும். 

மின்னிலக்க மாற்றம் சிங்கப்பூரர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்குகிறது என்பதை அந்தக் கண்காட்சி விளக்கும். மேலும், தொழில்நுட்பத்தை நம்பிக்கையுடன் பொதுமக்கள் பயன்படுத்தவும் அது ஊக்குவிக்கும். 

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்ற ஆர்ச்சர்ட் நூலகத்தின் நிறைவு நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ கலந்துகொண்டார். 

“நூலகங்கள் தொடர்ந்து ஒரு கற்கும் இடமாக இருந்து வருகின்றன. இந்தப் புதுப்பிப்புப் பணிகள் மூலம், சிங்கப்பூரர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்றார் திருவாட்டி டியோ. 

2026ஆம் ஆண்டின் நடுப்பகுதிவரை ஆர்ச்சர்ட் நூலகம் புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்படும் என்று தேசிய நூலக வாரியம் செப்டம்பரில் அறிவித்தது. அதன் தொடர்பில், ஒரு புதிய சிறுவர் புத்தகப் பிரிவு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

“தற்போது நூலகங்கள் பல சமூகங்கள் ஒருங்கிணையும் தளங்களாக அமைகின்றன. நூலகத்தில் தனித்துவமான வடிவமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், மாறுபட்ட திறன்களுடைய பல  மக்களை ஈர்க்கலாம்,” என்றார் தேசிய நூலக வாரியத்தின் மேலாளர் லாவண்யா கிருஷ்ணமூர்த்தி. 

குறிப்புச் சொற்கள்