இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கும் புதிய இயற்கைப் பூங்கா அமைக்கப்படவுள்ளது; இயற்கைப் பூங்கா ஒன்று புதுப்பிக்கப்படவுள்ளது.
72.8 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட மண்டாய் சதுப்புநில, கரையோர சேற்றுநில இயற்கைப் பூங்கா (Mandai Mangrove and Mudflat Nature Park), சுங்கை பூலோ ஈரநிலக் காப்பகத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்படவுள்ளது. கரையோரச் சுற்றுப்பாதைகள் (trails), பறவைக் கண்காணிப்புப் பகுதிகள் ஆகியவை அந்தப் பூங்காவில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புக்கிட் பாத்தோக் இயற்கைப் பாதை புதுப்பிக்கப்படவுள்ளது. அதன்கீழ் அங்கு மேம்படுத்தப்பட்ட சுற்றுப்பாதைகள் போன்ற அம்சங்கள் இடம்பெறும்.
புக்கிட் பாத்தோக் இயற்கைப் பாதையில் 125 ஹெக்டருக்கும் அதிக பரப்பளவைக் கொண்ட இயற்கைப் பூங்காக்களும் 10 கிலோமீட்டர் நீளமுள்ள சுற்றுப் பாதைகளும் இருக்கின்றன.
புதிய மண்டாய் சதுப்புநில, கரையோரச் சேற்றுநில இயற்கைப் பூங்கா, புக்கிட் பாத்தோக் இயற்கைப் பாதை ஆகியவற்றுக்கான பணிகள் 2026ஆம் ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்பணிகள் 2028ஆம் ஆண்டு முதல் கட்டங்கட்டமாக நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை ‘இயற்கையில் ஒரு நகரம்’ என்ற நிலையை அடையச் செய்ய தேசிய பூங்காக் கழகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்விரு திட்டங்களும் அம்முயற்சிகளில் அங்கம் வகிக்கின்றன.
“இந்த முயற்சிகள் நமது உயிரினச் சூழலியல் தொடர்பை வலுப்படுத்துவது, நமது இயற்கை வளங்களை விரிவுபடுத்துவது ஆகியவற்றுக்கானவை மட்டுமல்ல. இயற்கையை மையமாகக் கொண்ட கூடுதல் பொழுதுபோக்கு வாய்ப்புகளையும் அவை சிங்கப்பூரர்களுக்கு வழங்குகின்றன,” என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ புதன்கிழமையன்று (ஜனவரி 22) ஃபேஸ்புக் பதிவு மூலம் தெரிவித்தார்.
மண்டாய் சதுப்புநில, கரையோர சேற்றுநிலம் தேசிய பூங்காவாகப் பாதுகாக்கப்படும் என்று தேசிய பூங்காக் கழகம் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது. அதேபோல் புக்கிட் பாத்தோக் இயற்கைப் பாதை குறித்த அறிவிப்பு 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது.