புதிய பெருந்திட்டத்தால் வீடுகளைத் தெரிவுசெய்ய கூடுதல் நீக்குப்போக்கு: ஆய்வாளர்கள்

2 mins read
05d72698-6ced-41ed-810e-2d6a181111cc
தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் (சிவப்புச் சட்டையில்), நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டம் 2025க்கான நகல் அறிக்கையை விளக்கும் கண்காட்சியை ஜூன் 25ஆம் தேதி சுற்றிப்பார்த்தார். அவருடன் கலாசார, சமூக, இளையர்துறைத் துணையமைச்சர் பே யாம் கெங்கும் மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் டெனிஸ் புவாவும் சென்றிருந்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேவைப்படும் பல்வேறு வசதிகள் வீடுகளுக்கு அருகே அமைந்திருக்கும் வகையில் குடியிருப்பாளர்கள் வீடுகளைத் தெரிவுசெய்ய முடியும் என்பதை ஆய்வாளர்கள் சுட்டினர்.

புதிய பெருந்திட்டம், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குச் சிங்கப்பூரின் நிலப் பயன்பாட்டுக்கான திட்ட நகல் அறிக்கையாகும்.

மேலும் ஆரோக்கியமான, மேலும் துடிப்புமிக்க வாழ்க்கைமுறையைப் பேணும் சூழலை உருவாக்குவதில் அது கூடுதல் கவனம் செலுத்துகிறது.

அத்துடன், நாட்டின் மூப்படையும் மக்கள் தொகைக்கு ஆதரவளிப்பதிலும் பருவநிலை மாற்றச் சவாலைச் சமாளிப்பதிலும் அது கவனம் செலுத்துகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கடல், ஆறு, பூங்காக்கள், தேவையான வசதிகள் போன்றவற்றை எளிதில் அணுகக்கூடிய வகையில் கூடுதலான வீடுகள் அமைந்திருப்பது சிங்கப்பூரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்குப் பேரளவு முக்கியத்துவம் தரப்படுவதைக் காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறினர்.

அதேநேரத்தில் மரபுடைமைக் கட்டடங்களையும் கலாசாரத் தலங்களையும் பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் தரப்படுவதை அவர்கள் சுட்டினர்.

குடியிருப்பு வட்டாரங்களுக்கு அருகே புதிய விளையாட்டு வசதிகளை அமைக்க, அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சி மேற்கொள்ளப்படுவதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சிங்கப்பூரர்கள் அவரவர் தேவைக்கேற்பத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் பல்வேறு வீடமைப்புத் தெரிவுகள் வழங்கப்படுகின்றன என்று கூறிய ஆய்வாளர்கள், மத்திய நகர்ப்புற வட்டாரம், பள்ளிகள், பூங்காக்கள், நீர்நிலைகள் போன்றவற்றுக்கு அருகில் இருக்கும் வீடுகளை அவர்கள் விருப்பத்துக்கேற்ப தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்பதைச் சுட்டிக்காட்டினர்.

ஆணையத்தின் புதிய பெருந்திட்டத்தின்கீழ், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் டோவர், டெஃபு, நியூட்டன், பெடர்சன் ஆகிய வட்டாரங்களில் ஏறத்தாழ 80,000 வீடுகள் கட்டப்படவிருக்கின்றன.

மேலும், செங்காங், உட்லண்ட்ஸ் நார்த், இயோ சூ காங் ஆகியவற்றில் ஒருங்கிணைக்கப்பட்ட சமூக நடுவங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

வீடுகளுக்கு அருகே எளிதில் அணுகக்கூடிய வகையில் வசதிகள் அமைந்திருப்பதால் வீட்டுக்கான தேவை சிங்கப்பூர் முழுவதும் சீராக அமைந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்துரைத்தனர். இதனால் வெவ்வேறு வட்டாரங்களில் வீட்டு விலை உயர்வு மேலும் சீரடையக்கூடும் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்