இந்திய வணிகங்களுக்கிடையே மின்னிலக்கத் தலைமைத்துவத்தை முன்னெடுக்கும் வகையில் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே புதிய இணக்கக் குறிப்பு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு அறிவியல் கழகமும் இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பும் (சிஐஐ) இணைந்துள்ள இந்த ஒப்பந்தம், பங்குபெறும் நிறுவனங்களுக்கான சிறப்புச் சான்றிதழ் திட்டத்தை வழங்கவுள்ளது.
ஆண்டுதோறும் நிகழும் இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் வணிக உச்சநிலைக் கூட்டத்தின்போது ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்தியாவுக்கான சிங்கப்பூர்த் தூதர் சைமன் வோங், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவின் மின்னிலக்க உருமாற்றச் சூழலை வலுப்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு பற்றிய உத்திபூர்வப் புரிந்துணர்வையும் நடைமுறை நுண்ணோக்கங்களையும் வழங்க இந்தப் பங்காளித்துவம் முற்படுகிறது.
இந்தக் கூட்டு முயற்சியின் ஓர் அங்கமாக, தேசியப் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு அறிவியல் கழகமும் இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பும் இணைந்து ஆளுகை, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்கான தலைமைத்துவத் திட்டத்தை வழங்கவுள்ளன.
நிறுவனங்களின் நிர்வாக அவை உறுப்பினர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், தொழில்துறைத் தலைவர்கள், மூத்த வர்த்தகத் தலைவர்கள் ஆகியோருக்கு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், முன்னதாக 2024ஆம் ஆண்டில் ஒருமுறையும் 2025ஆம் ஆண்டில் இருமுறையும் சோதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்த முன்னெடுப்பை முறைப்படுத்தி விரிவுபடுத்தும் வகையில், புதிய ஒப்பந்தத்தின்படி, 2026, 2027, 2028ஆம் ஆண்டுகளில் அரையாண்டுக்கு ஒருமுறை இத்திட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த முன்னெடுப்பின்கீழ் 65க்கும் மேற்பட்ட இந்தியத் தொழில்துறை நிர்வாகிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.
எதிர்காலத்திற்குத் தேவையான தலைமைத்துவத் திறன்களைத் தொழில்துறைக்கு உருவாக்குவதில் உள்ள தங்களின் அர்ப்பணிப்பை இந்தப் பங்காளித்துவம் பிரதிபலிப்பதாக என்யுஎஸ்-ஐஎஸ்எஸ் தலைமை நிர்வாக அதிகாரி கூங் சான் மெங் தெரிவித்தார்.
“செயற்கை நுண்ணறிவு, வணிகங்களையும் பொருளியல்களையும் மிக வேகமாக மாற்றியமைத்து வரும் வேளையில், அதனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் வாய்ப்புகளையும் நிர்வாகம் சார்ந்த தாக்கங்களையும் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
தொழில்துறைத் தலைவர்கள் இலக்கவியல் உருமாற்றத்தையும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புத்தாக்கத்தையும் எந்த அளவிற்குத் திறம்பட ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் இனி அமையும் என்று சிஐஐ தலைமை இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி தெரிவித்தார்.
“வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், நிர்வாகக் கட்டமைப்புகளில் தலைமைத்துவத் திறனை உருவாக்குவதில், என்யுஎஸ்-ஐஎஸ்எஸ் உடனான சிஐஐ அமைப்பின் கூட்டுழைப்பு ஒரு முக்கியப் படியாகும்,” என்று அவர் கூறினார்.

