அரசாங்கம், தொழிற்சங்கங்கள், முதலாளிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் வகையில் ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கத்தைச் சேர்ந்த பல சிறிய, நடுத்தர நிறுவனங்கள் முற்போக்கான பணியிட நடைமுறைகளை வலுப்படுத்துவதற்காகத் தொழிற்சங்கத்துடன் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளன.
லிஷாவின் தமிழ், இந்தியப் புத்தாண்டு நிகழ்ச்சிகளை முன்னிட்டு நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் லிஷாவும் உணவு, பானத் துறை கூட்டணி ஊழியர் சங்கமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
செய்தியாளர் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
“தொழிற்சங்கத்தின் சிறப்பு வளங்கள், நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதன் மூலம் லிட்டில் இந்தியாவில் உள்ள வணிகங்கள் போட்டித்தன்மையுடன் இருக்கவும் தகுந்த ஆதரவைப் பெறவும் இந்தக் கூட்டாண்மை வழிவகுக்கிறது. இந்த வணிகங்கள் ஒட்டுமொத்தச் சிங்கப்பூருக்கும் ஒரு துடிப்பான கலாசார அடையாளமாகத் திகழ்கின்றன,” என்று தமது உரையில் குறிப்பிட்டார் திரு தினேஷ்.
இதற்கு அப்பாற்பட்டு இந்த ஆண்டு தமிழ், இந்தியப் புத்தாண்டு நிகழ்ச்சிகள் சார்ந்த தகவல்களும் செய்தியாளர் கூட்டத்தில் பகிரப்பட்டன.
தமிழ், இந்தியச் சமூகங்களைச் சேர்ந்த முக்கிய ஆளுமைகளை கௌரவிக்கும் வகையில் சிராங்கூன் சாலையின் புகழ்பெற்ற விளக்குக் கம்பங்கள் ஏப்ரல் மாதம் முழுவதும் ஒரு திறந்தவெளிக் கலைக்கூடமாக மாற்றப்படவுள்ளன.
சமூகம், கலாசாரத்திற்குச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள் ஆற்றிய பங்களிப்புகளை முன்னிலைப்படுத்தி அவர்களைக் கொண்டாடுவதும் அங்கீகரிப்பதுமே இந்த ஆண்டின் சிறப்பு நோக்கமாகும்.
சித்திரைக் கலை விழா இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் கலாசார நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். புதிய தலைமுறையினருடன் பாரம்பரிய வேர்களை இணைக்கும் நேரடிக் கலை நிகழ்ச்சிகள், செவ்விசை, கலை வெளிப்பாடுகளின் வாயிலாகத் தமிழ் மொழி, நிகழ்த்து கலைகளின் வளமான மரபினை இந்த விழா வெளிப்படுத்தும்.
தொடர்புடைய செய்திகள்
இந்த மாதம் (ஏப்ரல்) 11, 12ஆம் தேதிகளில் பிஜிபி மண்டபத்தில் விழா இடம்பெறும்.
அடுத்ததாக, புத்தாண்டின் சிறப்பம்சமாக இந்தியப் புத்தாண்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி பிஜிபி மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
வர்த்தகங்களுக்கு ஆதரவளிப்பதோடு சமூக மேம்பாட்டையும் வலுப்படுத்தி வாடிக்கையாளர்களின் செலவினங்கள் மூலம் நேர்மறையான சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சூழலமைப்பை உருவாக்கப் புதிய திட்டம் ஒன்று அறிமுகம் காணவுள்ளது.
‘சேப்3’ எனும் இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் சலுகைகளைப் பெறலாம்.
அதே வேளையில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிப்பு, மேம்பட்ட வர்த்தகத் தெரிவுநிலை ஆகியவற்றின் மூலம் வர்த்தகர்கள் நன்மையடைவார்கள்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை லிஷா பின்னர் வெளியிடும்.
சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்துடன் இணைந்து லிஷா, புதிய ‘சிண்டா பேருந்து’ ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்தியப் பயனாளிகளுடன் சமூக அமைப்புகள், அரசாங்க முகவைகள் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கான ஒரு நடமாடும் தளமாக இந்தப் பேருந்து செயல்படும்.
பேருந்தின் உட்புறத்தில் புத்தக அலமாரிகள், ஒரு தொலைக்காட்சி, வாசிக்கும் பகுதிகள், குழந்தைகளுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கதை சொல்லும் இடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
பேருந்திற்கு வெளியே உள்ள இடமானது, வேலைவாய்ப்புக் கண்காட்சிகள், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிகழ்ச்சிகள் போன்ற சமூக முன்னெடுப்புகளை நடத்துவதற்காகப் பயன்படுத்தப்படும்.
இந்தப் பேருந்து இந்தியப் புத்தாண்டு நிகழ்ச்சியன்று அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும்.
“புரிந்துணர்வு ஒப்பந்தம் லிட்டில் இந்தியாவில் உள்ள வர்த்தகங்களுக்கு ஏதுவாக இருக்கும். அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அது வழியமைக்கும். இவற்றுக்கு அப்பாற்பட்டு சித்திரைக் கலை விழா, இந்தியப் புத்தாண்டு நிகழ்ச்சி போன்ற பல புதிய அம்சங்களை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளோம்,” என்றார் லிஷா தலைவர் ரெகுநாத் சிவா.

