பாலர் பள்ளித் தலைவர்களின் மனநலம் சீராக இருப்பதை உறுதிசெய்ய கலைகள் சார்ந்த மனநலத் திட்டமொன்று அறிமுகம் காண்கிறது.
மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம் (பிசிஃஎப்), சிங்கப்பூர்க் கலைவழி சிகிச்சையாளர் சங்கத்துடன் (Arts Therapists Association) இணைந்து அம்முயற்சியின் முதற்கட்ட சோதனைத் திட்டத்தை வியாழக்கிழமை (அக்டோபர் 29) ஸ்கேப் வளாகத்தில் அறிமுகப்படுத்தியது.
நிகழ்ச்சியில் பிசிஃஎப் ஸ்பார்க்கல்டாட்ஸ், ஸ்கூல்4கிட்ஸ், எம்.ஒய்.வோர்ல்ட் ஆகிய பாலர் பள்ளிகளைச் சேர்ந்த 60 தலைவர்கள் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரர்களின் மனநலத்தைப் பேணுவதில் மக்கள் செயல் கட்சியின் மனநலக் குழு அதிக கவனம் செலுத்தி வருவதால், தனது முயற்சிகளில் ஒன்றாக இத்திட்டத்திற்கான பங்காளிகளை ஒன்றிணைத்ததாக அது தெரிவித்தது.
அடுத்த ஓராண்டில் இம்முயற்சி ஏறக்குறைய 444 பாலர் பள்ளிகளில் பணிபுரியும் 400க்கும் மேற்பட்டோர்க்கு ஆதரவு வழங்குமென்று பிசிஃஎப் தெரிவித்தது.
350 பிசிஃஎப் பாலர் பள்ளிகள், 58 எம்.ஒய்.வோர்ல்ட் பாலர் பள்ளிகள், 36 ஸ்கூல்4கிட்ஸ் பாலர் பள்ளிகள் இம்முயற்சியில் பங்கெடுக்கவுள்ளன.
திட்டத்தின்கீழ், பங்கேற்பாளர்கள் கலைவழி சிகிச்சையாளர் சங்க வல்லுநர்களுடன் இரண்டு மணி நேர மனநலப் பயிலரங்குகளில் பங்கேற்பர்.
புத்தாக்க வெளிப்பாட்டின்வழி எவ்வாறு உளவியல் அழுத்தத்தைக் குறைக்கலாம், தன்வெளிப்பாட்டை அதிகரிக்கலாம், உணர்ச்சிக் கட்டுப்பாட்டை மேம்படுத்தலாம் போன்றவற்றைப் பங்கேற்பாளர்கள் கற்றுக்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிசிஃஎப் அம்மைப்பின் தலைவரும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு எட்வர்ட் சியா, பாலர் பள்ளிக் கல்வியாளர்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களைச் சமாளிக்க அவர்களுக்குத் தேவையான ஆதரவு வழங்கப்படுவது முக்கியமென்று வலியுறுத்தினார்.
“பாலர் பள்ளிக் கல்வியாளர்கள் பலர் அதிக பணிச்சுமையையும் சவால்மிகு வேலைச்சூழல்களையும் எதிர்கொள்கின்றனர். ஆகையால், அவர்களின் மனநலம் பேண ஆக்ககரமான ஆதரவு வழங்கப்படுவது அவசியமாகிறது. கல்வியாளர்கள் எதிர்காலத்தில் தாமாக மனநலப் பயிற்சிகளில் ஈடுபட தேவையான திறன்களைக் இத்திட்டம் கற்பிக்கும்,” என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் ஓங்கும் கலந்துகொண்டார்.
கலைவழி சிகிச்சையாளர் சங்கத்தின் தலைவர் எலிசா ஹான், திட்டத்தின் பயிலரங்குகள் கல்வியாளர்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பான சூழலை வழங்குவதோடு அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கவும் உதவுமெனக் குறிப்பிட்டார்.
பங்கேற்பாளர்களில் ஒருவரான திலகா பெரியசாமி, நிகழ்ச்சியின் நடவடிக்கைகள் பயனுள்ளதாகவும் மனத்திற்கு இதமாகவும் அமைந்ததாகப் பகிர்ந்துகொண்டார்.
“இந்த நடவடிக்கைகளை என் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களும் பயன்பெறச் செய்ய வேண்டுமென விரும்புகிறேன். அதன் பின்னர், மாணவர்களையும் அத்தகைய கலை நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முற்படுவேன்,” என்றார் அவர்.
எதிர்காலத்தில் மற்ற பாலர் பள்ளி நடத்துநர்கள், ஆசிரியர்கள், பிற பாலர் பள்ளி ஊழியர்கள் ஆகியோர்க்கும் அத்திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டங்கள் உள்ளதென பிசிஃஎப் தெரிவித்தது.
