ஜோகூர் பாரு: சிங்கப்பூர்-ஜோகூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது, ஜோகூரின் சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு புதிய ஊக்குவிப்பாக இருக்கும் என்று ஜோகூர் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) அன்று சிங்கப்பூரின் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கைச் சந்தித்த பிறகு அவர் இக்கருத்தை வெளியிட்டார்.
கோத்தா இஸ்கந்தரில் இருவரும் சந்தித்துப் பேசினர்.
“இந்தச் சந்திப்பு, ஜோகூர்-சிங்கப்பூர் பொருளியல் மண்டலம் வழியாக சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையே சுகாதாரத் துறையில் இருதரப்பு உறவு, ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது,” என்று ஃபேஸ்புக் பதிவில் ஜோகூர் முதல்வர் குறிப்பிட்டார்.
ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் அமைப்பதற்கான ஒப்பந்தம் ஜனவரி 7ஆம் தேதி கையெழுத்தானது.
“சந்திப்பின்போது, பல தலைப்புகளை ஒட்டிப் பேசினோம். நிபுணத்துவப் பரிமாற்றம், கூட்டு ஆய்வு, எல்லை தாண்டிய மருத்துவப் பயணச் சேவை உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்,” என்றார் அவர்.
ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம், இருதரப்பு சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு எப்படி உதவும், அதன் மூலம் சுகாதாரக் கட்டமைப்பின் ஆற்றலை எப்படி மேம்படுத்துவது என்பனவற்றை திரு ஒன் ஹஃபிஸ் எடுத்துக் கூறினார்.
“சிறப்பு சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை மேம்படுத்துவதை இந்த ஒத்துழைப்பு இலக்காகக் கொண்டுள்ளது. ஆகவே, இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் மருத்துவப் பயணத்தை மேம்படுத்த இது உதவும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த முயற்சியானது ஒருங்கிணைந்த மருத்துவப் பயணங்கள் மூலம் பொருளியலை மேம்படுத்துவதுடன், ஜோகூர் - சிங்கப்பூருக்கு நன்மை அளிப்பதாகவும் அமையும் என்றும் அரசு நம்புகிறது.
“இந்தத் திட்டம், அதிக வேலை வாய்ப்புகளை, உருவாக்கி சுகாதாரத் துறை மேலும் மேம்படும்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், சிங்கப்பூர் அமைச்சர் ஓங்குடனான கலந்துரையாடலில் திரு ஓன் ஹஃபிஸ் காஸியுடன் பங்கேற்ற ஜோகூர் சுகாதார மற்றும் ஒற்றுமைக் குழுத் தலைவர் லிங் டியான் சூன், இந்தச் சந்திப்பை ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நெருங்கிய உறவுக்குச் சான்று என்று தெரிவித்தார்.